Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நலம் பெறுவது எப்போது?

Print PDF

தினமலர்            25.11.2010

நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நலம் பெறுவது எப்போது?

செங்குன்றம் : நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் உள்ளூர் சாலை வசதிகள் இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையால் முன்னேற்றம் காண முடியாமல் திணறி வருகிறது. 18 வார்டுகள், 100க்கும் மேற்பட்ட தெருக்களில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை, 15,850 வாக்காளர்களுடன் சென்னை, திருவள்ளூர் மாவட்ட எல்லையில் நெல், அரிசி மொத்த வியாபாரத்தின் மையமாக விளங்கும் செங்குன்றம் தான் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி. செங்குன்றத்தின் பிரதான தொழில் நெல், அரிசி வியாபாரம். அதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 80க்கும் மேற்பட்ட பழைய மற்றும் நவீன அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

அரசு ஆண்கள், பெண்கள் ஆரம்ப பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழலேரியின் ஒரு பகுதி ஆகியவை இப்பேரூராட்சியின் அடையாளச் சின்னங்களாக உள்ளன. இந்த பேரூராட்சி பகுதியில் இருந்து தினமும் ஐந்து "டன்' அளவிற்கு குப்பை சேகரிக்கப்படுகிறது. தற்போது மொத்த குப்பையும் இடுகாட்டின் ஒரு பகுதியில் கொட்டப்படுகிறது. அவ்வப்போது விஷமிகள் குப்பைகளை எரிப்பதால் பவானி நகர், தீர்த்தகிரையம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படுகின்றனர். குப்பையை சேகரித்து வைப்பதில் இடப்பிரச்னை நீடிக்கிறது. அதற்கான முறையான குப்பை கிடங்கு அமைக்க இடம் இல்லை. நாரவாரிக்குப்பம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் ஒரு அடி ஆழம் மட்டுமே உள்ளன. அக்கால்வாய்கள் மட்டுமல்லாது, அப்பகுதியின் புழலேரிக் கரையை ஒட்டிய பொதுப்பணித் துறை கால்வாயும், பொதுமக்களின் அலட்சியத்தால், குப்பை கழிவுகளால் நிரம்பி வழிகின்றன. கழிவு வெளியேற வழியில்லாமல், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார் சாலைகளும் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. பேரூராட்சியின் சாலைகளில் மிக நீளமான (865 மீட்டர்) திரு.வி.., தெரு சாலையில் டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அளவிற்கு பள்ளங்கள் உள்ளன. மற்றொரு முக்கிய பிரச்னையாக பேரூராட்சி எல்லைக்குட்பட்ட ஜி.என்.டி., சாலை மக்களை பாதிக்கிறது. மூன்று அல்லது நான்கு ஆண்டிற்கு ஒரு முறை சாலையின் விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டாலும், இன்று வரையிலும் அரைகுறையாகவே உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் ஏராளமான நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அவற்றை அகற்ற பேரூராட்சி நிர்வாகமோ, போலீசாரோ சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் விபத்துகள் தொடர்கதையாக உள்ளன. பஸ் நிலையத்தை ஒட்டிய ஜி.என்.டி., சாலை பள்ளத்தாக்கு போல் உள்ளது. இதனால் 10 நிமிடத்திற்கு பலத்த மழை பெய்தாலும், மினி ஏரி போன்று தண்ணீர் தேங்கி விடுகிறது.

சாலையோரம் உள்ள கால்வாயில் இருந்து ஏராளமான கழிவுநீர் வெளியேறி, மழை நீரில் கலந்து விடுகிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டில் அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி தலைவர் ஆர்.ஆர்.சக்கரபாணி (காங்.,) கூறியதாவது: தினமும் எடுக்கப்படும் குப்பைகளை சேகரிக்க, அலமாதி அருகே ஐந்து ஏக்கர் இடம் கேட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளோம். அனுமதி கிடைத்தால் குப்பை கிடங்கும், துப்புரவு தொழிலாளர்களுக்கான குடியிருப்பும் அங்கு கட்டப்படும். பஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலையில் மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீரை, நாங்கள் தான் மோட்டார் மூலம் வெளியேற்றி, சாலை பள்ளங்களில் "ரப்பீஸ்' கொட்டி சீரமைத்து வருகிறோம். இது பற்றி நெடுஞ்சாலைத் துறையிடம் கடிதம் மூலம் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை இல்லை. அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மத்திய அரசின் சிறப்பு சாலைகள் திட்டம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகள் பேரூராட்சியில் செய்யப்பட உள்ளன. இவ்வாறு சக்கரபாணி கூறினார