Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Print PDF

தினமணி               25.11.2010

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ. 24: நகராட்சி நிர்வாகத்தின் செயலர், சென்னை குடிநீர் வாரிய தலைவர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருகம்பாக்கத்தை சேர்ந்த சேவாமன் அறக்கட்டளையைச் சேர்ந்த ஏ. நாராயணன் என்பவர் அரசுச் செயலர், நகராட்சி நிர்வாக செயலர், சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் ஆகியோரை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் அந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் நாராயணன் நேரில் ஆஜராகி கூறியது:

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் பாதாள சாக்கடையில் கழிவு நீர் அடைப்புகளை மனிதர்கள் இறங்கி சரிசெய்வதைத் தடுக்கும் வகையில், உயர் நீதிமன்றம் சிறப்புக் குழு அமைத்து கடந்த அக்டோபர் 20-ம் தேதி உத்தரவு பிறப்பித்து. எனினும், அந்தக் குழு முறையாகக் கூடி விவாதிப்பதில்லை. உத்தரவு பிறப்பித்த பின்னர் அண்மையில் கூட 2 பேர் சாக்கடை அடைப்பைச் சரிசெய்யும் போது இறந்துவிட்டனர்.

எனவே, அந்தக் குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற முதன்மைச் செயலரை தலைவராக நியமித்து, குழு சிறப்பாக செயல்பட உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

அப்போது அரசு ப்ளீடர் ராஜாகலிபுல்லா கூறியது:

கழிவு நீர் அடைப்புகளைச் சரிசெய்ய இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. கழிவு நீர் அடைப்பு குறித்து எந்த புகார் வந்தாலும், உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே, அவர்கள் இந்த வழக்கு மறுமுறை விசாரணைக்கு வரும் போது, நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.