Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"தேங்கிய மழைநீரை அகற்ற தீவிர நடவடிக்கை'

Print PDF

தினமணி            26.11.2010

"தேங்கிய மழைநீரை அகற்ற தீவிர நடவடிக்கை'

மதுரை, நவ. 25: மதுரை நகரில் தேங்கியுள்ள நீரை டீசல் என்ஜின்கள் மூலம் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.

பருவமழை காரணமாக, மதுரை நகரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மாநகராட்சி அலுவலர்களுடன் ஆணையர் எஸ். செபாஸ்டின் வியாழக்கிழமை காலை அவசர ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் ஆணையர் தெரிவித்த தகவல்கள்:

மழைநீர் அதிகம் தேங்கியுள்ள இடங்களில் டீசல் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போடி லைன், செல்லூர் கேடிகே தங்கமணி நகர் 1-வது தெரு, துரைச்சாமி நகர் போன்ற பகுதிகளில் இப்பணி தீவிரமாக நடைபெறுகிறது.

இப்பணியில் தனியார் ஜேசிபி வாகனங்கள், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 4 மண்டலங்களுக்கும் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

போடி-லைன், பூக்காரத் தெரு ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால், அப்பகுதி மக்கள் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான 3 வேளை உணவு, உடைகள் தனியார் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

கிருதுமால் வாய்க்கால், அவனியாபுரம், பந்தல்குடி, சாத்தையார் ஓடை, திருமலைராயர் படித்துறை உள்ளிட்ட 9 வாய்க்கால்களில் அடைப்பு எடுக்கப்பட்டு, மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை நீர் மூலம் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க, குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களில் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

வைகை ஆற்றின் கரையோரம் வரும் குப்பைகள் அகற்றப்பட்டு, வெள்ளக்கல் மையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன எனத் தெரிவித்தார்.

மழை நீர் வடிகால் பகுதிகளில் அடைப்பு காரணமாக தேக்கம் ஏற்பட்டு இருந்தால், உடனடியாக அடைப்பை அகற்றுமாறும், தண்ணீர் அதிகமாகத் தேங்கியிருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட வார்டு உதவிப் பொறியாளர்கள், ஆணையர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறும், அவர் அறிவுறுத்தினார்.