Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாசவேலையை முறியடிக்க டெல்லி தெருக்களில் விரைவில் குண்டு துளைக்காத குப்பை தொட்டி

Print PDF

மாலை மலர் 27.08.2009

நாசவேலையை முறியடிக்க டெல்லி தெருக்களில் விரைவில் குண்டு துளைக்காத குப்பை தொட்டி

புதுடெல்லி. ஆக.27-

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது குப்பை தொட்டிகள்தான்.

மக்கள் திரளும் காய்கறி மார்க்கெட்டுக்கள், பஸ்நிறுத் தங்கள் ஆகியவற்றில் வெடி குண்டுகளை தெருவில் சாதாரணமாக வைக்க இயலாது என்பதால், அந்த பகுதிகளில் குப்பைத் தொட்டிகளை தீவிரவாதிகள் தேர்ந்து எடுப்பார்கள்.

டெல்லி, மும்பை, ஆமதாபாத், பெங்களூரில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பை நடத்திய தீவிரவாதிகள் குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டுகளை குப்பைத் தொட்டிகளில்தான் பதுக்கி வைத்தனர். இதனால் பஸ்நிறுத்தங்களில் குப்பை தொட்டி உள்ள பகுதி அருகே நின்ற ஏராளமான பயணிகள் உயிரிழந்தனர்.

தீவிரவாதிகளின் இத்தகைய முயற்சிகளை எதிர்காலத்தில் முறியடிப்பது பற்றி டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்கள். டெல்லியில் அடுத்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக நவீன பாதுகாப்பான குப்பைத் தொட்டிகளை வைக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வைக்கப்படும் குப்பை தொட்டிகள் குண்டு துளைக்காத குப்பைத் தொட்டிகளாக இருக்கும். இந்த குப்பைத் தொட்டிகள் ஒவ்வொன்றும் தலா ரூ.50 ஆயிரம் மதிப்புடையது. இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் இந்த நவீன குப்பைத் தொட்டிகள் மக்களுக்கு பாதுகாப்பு கேடயமாக இருக்கும்.

தீவிரவாதிகள் இந்த குப்பை தொட்டிகள் குண்டு வைத்தாலும் யாருக்கும் பாதிப்பு வராது. ஏனெனில் குண்டுகள் வெடித்தாலும் இந்த குப்பைத் தொட்டி சிதறாது.

டெல்லி ரெயில் நிலையங்கள், விளையாட்டு ஸ்டேடியங்கள், விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதிகள், கார்நிறுத்தும் இடங்கள், முக்கிய கட்டிடங்களில் இந்த நவீன குப்பைத் தொட்டிகள் விரைவில் வைக்கப்பட உள்ளன.