Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தயாநிதி மாறன் தொகுதி நிதியில் கட்டப்படும் பெரம்பூர் லோகோ மேம்பாலம் 20ம் தேதிக்குள் முதல்வர் திறப்பு

Print PDF

தினகரன்              01.12.2010

தயாநிதி மாறன் தொகுதி நிதியில் கட்டப்படும் பெரம்பூர் லோகோ மேம்பாலம் 20ம் தேதிக்குள் முதல்வர் திறப்பு

சென்னை, டிச.1: மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது:

மீனாட்சி வெங்கட்ராமன் (காங்கிரஸ்): வேளச்சேரி ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள குடிசைகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபு (சுயேச்சை): மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் குடிசையில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்: தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். இவர்களை பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, பட்டா வழங்குவதற்கான தீர்மானம் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சுசிலா கோபாலகிருஷ்ணன் (காங்கிரஸ்): மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென வீடுவீடாக சென்று குடியிருப்புகளை அளக்கிறார்கள். இதனால் சொத்து வரி உயர்த்தப்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

மேயர்: நான்கரை ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை. அரசு சொத்து வரி உயர்த்த வாய்ப்பு அளித்தும் மாநகராட்சி உயர்த்தவில்லை. கடந்த சில ஆண்டுகளில் சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களை வரி செலுத்த வைக்கும் நடவடிக்கையில் மாநக ராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த ஆண்டு ரூ380 கோடியும், இந்த ஆண்டு ரூ400 கோடியை தாண்டியும் வருவாய் அதிகரித்துள்ளது.

தேவி (மார்க்சிஸ்ட்): பெரம்பூரில் தனியார் பள்ளியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சைக்கிள் பார்க்கிங் அமைத்து அதற்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பூர் லோகோ மேம்பாலம் மற்றும் வில்லிவாக்கம் பாலத்தை விரைவில் திறக்க வேண்டும்.

மேயர்: மத்திய சென்னை எம்பியும் மத்திய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டு வரும் பெரம்பூர் லோகோ மேம்பாலத்தை வரும் 20ம் தேதிக்குள் முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார். துணை முதல்வர் மு..ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். இதற்கான தேதியை முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் கேட்டுள்ளோம்.

இந்த பாலம் திறக்கப்பட்டால் பெரம்பூர், ஐசிஎப், வில்லிவாக்கம் மற்றும் வியாசர்பாடி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், போக்குவரத்து நெரிசலும் குறையும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.