Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கவுன்சிலர்கள் காரசார விவாதம் மேயர் வார்டில் பூங்காவை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்

Print PDF

தினகரன்            01.12.2010

கவுன்சிலர்கள் காரசார விவாதம் மேயர் வார்டில் பூங்காவை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்

கோவை, டிச. 1: கோவை மாநகராட்சி பொது நிதியில் இருந்து மேயர் வார்டு பூங்காவுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து கல்விக்குழு ஒப்புதல் பெறாதது ஏன் என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

கோவை மாநகராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி 62வது வார்டில் எஸ்.கே.வி நகர், மணியம் காளியப்பன் வீதி, கணபதி லே அவுட் பூங்காக்கள் அபிவிருத்தி செய்வதற்கு ரூ14.50 லட்சம் ஒதுக்கீடு செய்வதை அனுமதிப்பது குறித்த தீர்மானம் பார்வைக்கு வைக்கப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது மாநகராட்சி கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம் பேசுகையில், "ஏற்கனவே இந்த பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டுள்ளன.

மாநகரின் மற்ற பகுதிகளில் பூங்காக்களை செப்பனிட பொது நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யமுடியாது என தெரிவிக்கப்பட்டது. இந்த பூங்காவில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பான எந்த தகவலும் கல்விக்குழுவுக்கு தெரிவிக்கப்படவில்லை. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் செய்யப்படும் பணிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கவேண்டும்," என்றார்.

இதற்கு பதிலளித்த மேயர் வெங்கடாச்சலம், கல்விக்குழுவுக்கு தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அங்கு நிலுவையாக உள்ள பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது," என்றார். மேயரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் மீனா லோகநாதன், பிரபாகரன், கண்ணதாசன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மேயர் வார்டில் மட்டும் பொது நிதி ஒதுக்கீடு செய்வது நியாயமாக இல்லை.

மற்ற வார்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன. மாநகரில் பல்வேறு அடிப்படை தேவைகளுக்கு பொது நிதி தேவைப்படும் சூழலில் பூங்காவுக்கு இந்த நிதியை ஒதுக்கீடு செய்தது நியாயமில்லை," என காரசாரமாக வாதிட்டனர்.

ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விவரங்களை மாநகராட்சி பொறியாளர் தெரிவித்தார். இதையடுத்து பிரச்னை கை விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.