Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அதிகாரிகளை கண்டித்து தீர்மானம் கம்பம் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு

Print PDF

தினகரன்          01.12.2010

அதிகாரிகளை கண்டித்து தீர்மானம் கம்பம் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு

கம்பம், டிச.1: கம்பம் நகர்மன்ற கூட்டத்தில், அதிகாரிகளின் செயல்பாட்டு குறையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம் நகர்மன்ற மாதாந்திர கூட்டம், தலைவர் அம்பிகாபாண்டியன் தலைமை வகித்தனர். நகராட்சி உதவி பொறியாளர் (பொ) பன்னீர்செல்வம், மேலாளர் புஷ்பலதா கட்டிட ஆய்வாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் விவாதம்:

அஜ்மல்கான்: நகர்மன்ற கூட்டத்தில் ஆணையாளர், பொறியாளர், சுகாதார அலுவலர் இல்லாமல் கூட்டம் எப்படி நடத்துவது? உறுப்பினர்களின் கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பது?

தலைவர்: உதவி பொறியாளர், மேலாளர், கட்டிட ஆய்வாளர் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளனர். அவர்கள் பதில் அளிப்பார்கள்.

அப்பாஸ்: உயர் அதிகாரிகள்தான் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். கடந்த மாதம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகிலுள்ள பாம்போ கழிப்பறை சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிப்பது யார்?

தவமணி, அப்பாஸ், அஜ்மல்கான்: அதிகாரிகள் திட்டமிட்டு நகர்மன்ற கூட்டத்தை நிராகரித்துள்ளனர். அதனால் இக்கூட்டத்தை ரத்து செய்து விட்டு அதிகாரிகள் பங்கேற்கும் தேதியில் வைக்க வேண்டும்.

தலைவர்: நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் நடத்தும் கூட்டத்திற்கு தவிர்க்க முடியாத காரணத்தில் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

கவுன்சிலர்கள்: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள பாம்போ கழிப்பறை சம்பந்தமாக முறையாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

நக்கீரபாண்டியன்: கம்பம் வாரச்சந்தையில் எம்பி நிதியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி யை சிலர் நீச்சல் குளமாக பயன்படுத்துகின்றனர்.

தலைவர்: குளிப்பவர்கள் யார் என்று தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வாசு, சிவமணி, கனகவள்ளி: புதிய குடிநீர் திட்டத்தில் 4, 19, 20, 21, 22, 28 வார்டு மக்கள் பயன் பெறும் வகையில் பார்க் திடலில் புதியதாக குடிநீர் மேல் நிலை தொட்டி அமைக்க வேண்டும்.

தலைவர்: புதிய குடிநீர் திட்டபணிகளின் வரைபடம். டெல்லிக்கு அதிகாரிகள் அனுமதிக்கு சென்று விட்டது. பொது நிதியில் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஸ்கரன்: 33வது வார்டில் ஒரு வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை தொட்டியை காணவில்லை.

உதவிபொறியாளர்: ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை தொட்டி அமைக்கும் பணியை டெண்டர் எடுத்த ஒப்பந்தகாரர் மாற்றப்பட்டுள்ளார். அதிவிரைவில் அமைக்கப்படும்.

மேலும் பல பொருள்கள் மீது விவாதம் நடைபெற்றது.