Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழநி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் நகர்மன்ற தலைவர் உறுதி

Print PDF

தினகரன்                01.12.2010

பழநி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் நகர்மன்ற தலைவர் உறுதி

பழநி, டிச.1: பழநி அடிவாரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று நகர்மன்ற தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.

பழநி நகர்மன்ற கூட்டம் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஹக்கீம், ஆணையர் மூர்த்தி, பொறியாளர் முத்து மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

துணைத்தலைவர்: நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரி மேல்முறையீட்டு குழு நடவடிக்கை சரியில்லை. வரி நிர்ணயிப்பில் முறைகேடு நடந்துள்ளது.

தலைவர்:ஒரு வார காலத்திற்குள் வரி முறையீட்டு குழு கூட்டம் நடத்தப்பட்டு இதுகுறித்து விவாதிக்கப்படும்.

கந்தசாமி:பழநி நகரில் பலருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை. பலரது ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. வருவாய்த்துறையின் அலட்சியத்தை கண்டிக்க வேண்டும்.

(இக்கருத்தை வலியுறுத்தி கந்தசாமி மற்றும் கவுன்சிலர் கன்னிகா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.)

தலைவர்:கணிப்பொறியில் ஏற்பட்ட குளறுபடியால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.

மல்லிகா:அடிவாரம் ரவுண்டானா அருகில் உள்ள நகராட்சி சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.

தலைவர்:நகராட்சி நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பாப்பாத்திசேட்:காமராசர் வீதியில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி இடிந்து விழும் தருவாயில் உள்ளது.

பொறியாளர்: விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பழனிச்சாமி: நகரில் பன்றிகள் சுற்றி திரிவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

தலைவர்:அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மணிராஜ்:நகரில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.

தலைவர்:கொசுமருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்படும்.

ஷாகுல்அமீது:பழநி அரசு மருத்துமனையில் டாக்டர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை.

தலைவர்:மருத்துவ அலுவலரிடம் இப்புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

பத்மினி முருகானந்தம்:நாடாளுமன்ற உறுப்பினர் நிதி சுமார் ரூ.20 லட்சம் அளவிற்கு பழநி நகருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் நடக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தலைவர்:மாற்று பணிக்கு நிதியை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஜீப்தீன்:காந்தி சாலையில் சாக்கடை வடி கால் வசதியின்றி உள்ளது.

தலைவர்:சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.