Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆவின் நிலம் திருச்சி மாநகராட்சிக்கு விற்பனை: தடை கோரும் மனுவுக்கு பதிலளிக்க நோட்டீஸ்

Print PDF

தினமணி                   01.12.2010

ஆவின் நிலம் திருச்சி மாநகராட்சிக்கு விற்பனை: தடை கோரும் மனுவுக்கு பதிலளிக்க நோட்டீஸ்

மதுரை,நவ. 30: திருச்சி ஆவின் நிறுவனத்துக்குச் சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மாநகராட்சிக்குக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யத் தடை கோரிய மனுவுக்கு, ஆவின் பொது மேலாளர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் திருச்சி மாவட்டம், முசிறி சடமங்கலத்தைச் சேர்ந்த மாநில இணைச் செயலர் கணேசன் தாக்கல் செய்த மனு:

திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 750 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன.

இந்த சங்கங்களில் இருந்து, திருச்சி பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) தினசரி 3.5 லட்சம் விட்டர் பால் கொள்முதல் செய்கிறது. ஒன்றியத்துக்குச் சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை, திருச்சி மாநகராட்சிக்கு மிகவும் குறைந்த விலையில் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விற்பனையால் ஆவின் நிறுவனத்துக்கு மிகவும் இழப்பு ஏற்படும். இதற்கான தீர்மானம் நிறைவேற்ற மகாசபைக் கூட்டம் 1.12.2010-ல் கூட்டப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நில விற்பனை தொடர்பாக தீர்மானிக்கத் தடைவிதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், நிலம் குறித்து கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம், இந்த வழக்கின் இறுதி முடிவைப் பொறுத்தே அமையும். இந்த மனுவுக்கு, பால்வளத் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், ஆவின் பொதுமேலாளர் ஆகியோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.