Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை அள்ளுவதில் தேக்கம்: நீல் மெட்டல் அதிகாரிகளுடன் விரைவில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம்

Print PDF

தினமணி             01.12.2010

குப்பை அள்ளுவதில் தேக்கம்: நீல் மெட்டல் அதிகாரிகளுடன் விரைவில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம்

சென்னை, நவ. 30: குப்பைகள் அள்ளுவதில் தேக்கம் குறித்த புகார் தொடர்பாக, நீல் மெட்டல் நிறுவன அதிகாரிகளுடன், மாநகராட்சி மன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், நீல் மெட்டல் நிறுவன விவகாரம் குறித்து பிரச்னை எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய மன்ற உறுப்பினர்கள், நீல் மெட்டல் நிறுவனம் சார்பில் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் குப்பைகள் அள்ளுவதில் தேக்கம் நிலவி வருவதால், அந்நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து, மாநகராட்சியே அப்பணியை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து பேசிய மேயர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்:

நீல் மெட்டல் நிறுவனத்தில் பணியாளர் குறைவு போன்ற காரணங்களால் குப்பை அள்ளுவதில் தேக்கம் நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து, நீல் மெட்டல் நிறுவனத்துக்கு 50-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள், மாநகராட்சி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டன.

குப்பை அள்ளுவதில் ஏற்பட்ட தேக்க நிலையைத் தொடர்ந்து, நீல் மெட்டல் நிறுவனம் 4 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை நிறுத்த, மாநகராட்சி சார்பில் மே 24-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த 4 மண்டலங்களிலும் மாநகராட்சி சார்பிலேயே குப்பைகளை அள்ள 5,800 தூய்மைப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 17 ஆயிரம் பேரின் பெயர்கள் பெறப்பட்டன. இதில் மூப்பு அடிப்படையில் 11 ஆயிரம் பேர் நேர்காணலுக்கு வந்தனர்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து, நீல் மெட்டல் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு வரும் டிசம்பர் 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், தூய்மைப் பணியாளர்கள் நியமனம் குறித்து துணை முதல்வர் மு..ஸ்டாலின் தலைமையிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மேற்கண்ட 4 மண்டலங்களிலும் தூய்மைப் பணியை துரிதமாக நடத்திட உத்தரவிடப்பட்டது.

குப்பைகள் அள்ளுவதில் தேக்கம் குறித்து விரைவில் நீல் மெட்டல் நிறுவனத்தின் முடிவெடுக்கும் அதிகாரமுடைய அதிகாரிகளுடன், மாநகராட்சி சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அச்சமயத்தில், குப்பைகள் அள்ளுவதில் உள்ள குறைகளை தீர்க்க, நிறுவனத்தின் சார்பில் போதிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றார்.