Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலைகள் சீரமைப்பு சிறப்புத் திட்டத்தில் திருவொற்றியூர் புறக்கணிப்பு: துணை முதல்வரிடம் முறையிட நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமணி               02.12.2010

சாலைகள் சீரமைப்பு சிறப்புத் திட்டத்தில் திருவொற்றியூர் புறக்கணிப்பு: துணை முதல்வரிடம் முறையிட நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

திருவொற்றியூர், டிச. 1: சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த சாலைகள் சீரமைப்புத் திட்டத்தில் திருவொற்றியூர் நகராட்சி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்து துணை முதல்வர் மு..ஸ்டாலினை சந்தித்து முறையிடுவது என நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருவொற்றியூர் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜெயராமன் (மார்க்சிஸ்ட்) தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி.இராமநாதன் (தி.மு.) முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் எஸ்.கலைச்செல்வன், பொறியாளர் கவுதமன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:

எம்.டி.சேகர் (.தி.மு.): குப்பைகளைக் அகற்ற சேவைக் கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.

தன.ரமேஷ் (.தி.மு.): பிறப்பு பதிவேட்டில் பதிவு இல்லை என சான்றிதழ் அளிக்க வழக்கறிஞர் உறுதிமொழிச் சான்று வாங்கி வருமாறு வற்புறுத்தப்படுகிறது. இதற்கு ரூ.500 வரை பொது மக்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே இந்த நடைமுறையை நீக்கி எளிதில் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

தமிழ்ச்செல்வன் (தி.மு.): திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலின் மதில் சுவர்களை ஒட்டி லாரிகள் நிறுத்தப்படுகின்றன. மேலும் சிறுநீர் கழிக்குமிடமாகவும் மாறி துர்நாற்றம் வீசுகிறது. எனவே லாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.தனியரசு (தி.மு.): திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் நீண்ட நாள்களாக சாலைகளே போடப்படவில்லை என தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது. இதுவரை அப்பகுதியில் என்ன வேலைதான் நடந்துள்ளது?

தலைவர் ஜெயராமன்: திருவொற்றியூர் மேற்கு பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் போடப்படவில்லை.

ஆனால் இதுவரை பாதாளச் சாக்கடை பணிகள் நிறைவடைந்த பகுதிகள், முக்கியச் சாலைகள் என ரூ.5 கோடிக்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன.

.கருணாநிதி (தி.மு.): சமீபத்தில் நகராட்சி சாலைகளைச் சீரமைக்க தமிழக அரசு ரூ.ஆயிரம் கோடியில் சிறப்புத் திட்டத்தை அறிவித்தது. திருவொற்றியூர் நகரில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இது குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லாததால்தான் சிறப்புத் திட்டத்தில் நிதி கிடைக்கவில்லை.

இப்போதாவது மோசமான நிலையில் உள்ள சாலைகளைச் சீரமைப்பதற்கான மதிப்பீடுகளைச் தயார் செய்ய வேண்டும். பின்னர் நகர்மன்றத் தலைவர் தலைமையில் துணை முதல்வரைச் சந்தித்து சாலைகளைச் சீரமைக்க உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என முறையிடலாம் என்றார்.

தலைவர் ஜெயராமன்: உடனடியாக இதற்கான ஆயத்த வேலைகளைச் செய்கிறேன். அனைவரும் விரைவில் துணை முதல்வரைச் சந்திக்கலாம். இதை நகர்மன்றத்தின் முடிவாக எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு நடந்த விவாதங்களை அடுத்து பல்வேறு பணிகள் குறித்த 102 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரே ஒரு தீர்மானம் தள்ளி வைக்கப்பட்டது.

சென்னை, டிச. 1: சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் காசிமேடு துறைமுகத்தில் தேங்கியிருந்த குப்பைகளை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது.

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் குப்பைகள் தேங்கி, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து குப்பைகளை அகற்ற சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியனுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

அதன்படி 36 மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், 2 லாரிகள், பாப்காட் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு 30 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. மழைக்காலம் என்பதால் தொற்றுநோய் பரவாமல் இருக்க கொசு மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் இந்தப் பகுதியை தொடர்ந்து தூய்மையாக வைத்திருக்க மீனவர் சங்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.