Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழை பாதிப்புகள் மாநகராட்சி தீவிரம்

Print PDF

தினமலர்           06.12.2010

மழை பாதிப்புகள் மாநகராட்சி தீவிரம்

சென்னை : தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக மேயர் சுப்ரமணியன் கூறினார்.கடந்த இரண்டு நாட்களாக, தொடர்ந்து மழை பெய்வதால், நகரில் பல்வேறு இடங்களில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. புளியந்தோப்பு கன்னிகாபுரம், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது.பங்கிங்காம் கால்வாய் ஓரமுள்ள குடிசை பகுதிகள், தரமணி மற்றும் கோடம்பாக்கம் ராஜ்பிள்ளை தோட்டம் ஆகிய குடிசை குடியிருப்பு பகுதிகளில், தண்ணீர் புகுந்துள்ளது. அங்கு வசிக்கும் பொதுமக்களை வெளியேற்ற, மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தி.நகர் பசுல்லா சாலை, உஸ்மான் சாலை, ராகவையா ரோடு, கீழ்பாக்கம் மில்லர் சாலை, புரசைவாக்கம் அவதான பாப்பையா சாலை, எல்டாம்ஸ் சாலை, ஒயிட்ஸ் ரோடு, திருமலை பிள்ளை சாலை ஆகிய இடங்களில் முக்கால் அடி முதல், ஒரு அடி அளவிற்கு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.நகரில் உள்ள பெரும்பாலான வாகன சுரங்கப் பாதைகளில், தண்ணீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி கணேசபுரம், சுரங்கப்பாதை அருகே அளவுக்கதிகமாக மழைநீர் தேங்குவதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அந்த இடத்தில், மாநகராட்சியின் மூன்று மோட்டார் பம்புகள் தண்ணீரை இரைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.நகரில் பல்வேறு இடங்களில், சிறியதும், பெரியதுமாக 20 மரங்கள் முறிந்து விழுந்தன. அவைகளை, பூங்கா துறை ஊழியர்கள் மின்சார ரம்பம் உபயோகித்து, அறுத்து அப்புறப்படுத்தினர்.

சென்னை மேயர் சுப்ரமணியன், கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று காலை, நகரில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து, மழை தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தினர்.அப்போது மேயர் கூறியதாவது: கடந்த, இரண்டு நாட்களாக சென்னையில் 10 செ.மீ., அளவிற்கு மழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணிக்கு "பைபர்' படகுகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை நிவாரண மையங்களுக்கு கொண்டு செல்ல வசதியாக, மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் அதிகளவில் பாதிப்படைந்து, நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டால், அவர்களுக்கு உணவு வழங்க, மாநகராட்சியில் நான்கு உணவு தயாரிப்பு கூடங்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.தற்போது, ஓட்டேரி, தரமணி மற்றும் கோடம்பாக்கம் ராஜ்பிள்ளை தோட்டம் பகுதி மக்களுக்கு, உணவு வழங்க 20 ஆயிரம் உணவு பொட்டலங்கள், தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில், தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்த 150 மோட்டார் பம்ப்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்தால், பாதிப்புகளை தடுக்கவும் பொதுமக்களை காப்பாற்றி நிவாரண பணிகள் செய்யவும், மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.