Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் 60 தீர்மானங்கள் நிறைவேறின

Print PDF

தினமணி 29.08.2009

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் 60 தீர்மானங்கள் நிறைவேறின
சென்னை, ஆக. 28: சென்னை மாநகராட்சி சாதாரண மன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்ததும் மேயர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது:

தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய மூன்று மக்களவை உறுப்பினர்களுக்கு, அவரவர் தொகுதியில் தோராயமாக ரூ. 25 லட்சம் மதிப்பில் அலுவலகம் கட்டித்தர மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் டான்சி நிறுவனத்துக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அதை சென்னை மாநகராட்சி எடுத்துக் கொண்டு சமூகநலத் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

வேளச்சேரியில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரியையும், சேத்துப்பட்டில் உள்ள மீன்வளத் துறைக்குச் சொந்தமான ஏரியையும் மாநகராட்சி எடுத்துக் கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மழை நீர் மட்டுமே தேங்கும் வகையில் இந்த இரண்டு ஏரிகளையும் சுத்தப்படுத்தி சுற்றுலா மையமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

ரூ. 1.39 கோடியில் மீர்சாகிப் பேட்டை சுகாதார நிலையத்துக்கும், ரூ. 3.39 கோடியில் சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலை மகப்பேறு மருத்துவமனைக்கும் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு மன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

கிண்டி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் காலியாக உள்ள சிட்கோ நிலங்களை மக்கள் பயன்பாட்டுக்காக மாநகராட்சி எடுத்துக் கொள்ளவும், தாடண்டர் நகர் அரசு குடியிருப்பு மற்றும் கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள சாலைகள் மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்பை மாநகராட்சி எடுத்துக் கொள்ளவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

7 ஆயிரம் தங்க மோதிரங்கள் வாங்க முடிவு: சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து தமிழில் பெயர் சூட்டப்படும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 1.05 கோடியில் 7 ஆயிரம் தங்க மோதிரங்கள் வாங்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள 39 திட்டங்களை விரைவாக நிறைவேற்ற 8 நிபுணர்களை நியமிக்க மன்றத்தின் ஒப்புதல் பெறும் தீர்மானங்கள் உள்பட 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார் மேயர் மா. சுப்பிரமணியன்.

Last Updated on Saturday, 29 August 2009 02:03