Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியை முற்றுகையிட்ட மீன் வியாபாரிகள் கைது

Print PDF

தினமணி            09.12.2010

மாநகராட்சியை முற்றுகையிட்ட மீன் வியாபாரிகள் கைது

கோவை, டிச. 8: கோவை மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட மீன் கடைகளை ஏலம் எடுப்பதில் அரசியல் கட்சியினர், வெளியாட்கள் தலையிட்டுள்ளதாகக் கூறி, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மீன் வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

கோவை உக்கடம் பகுதியில் மீன் சந்தை உள்ளது. மீன் வியாபாரிகளுக்கான கட்டடம் பழுதடைந்துள்ளதால் அதன் அருகில் பேரூர் செல்லும் புறவழிச் சாலையில் மாநகராட்சி சார்பில் இறைச்சிக் கடைகளுக்காக புதிதாக கடைகள் கட்டப்பட்டுள்ளன.

இங்கு 68 கடைகள் உள்ளன. இவற்றை ஏலம் விட முடிவு செய்து அதற்காக வைப்புத் தொகையுடன் விண்ணப்பிக்க மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.

அதையடுத்து, கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில், புதிதாக கட்டப்பட்ட இடத்தில் கடைகளை எடுப்பதற்காக மீன் வியாபாரிகள் ஒன்றாக இணைந்து, தனித்தனிப் பெயர்களில் வைப்புத் தொகை ரூ. 50 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையுடன் ஏலத்தில் பங்கேற்க மாநகராட்சிக்கு விண்ணப்பித்தனர்.

புதிதாக கட்டப்பட்ட கடைகளில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்துக்கு இரு கடைகள் தவிர, மீதமுள்ள கடைகளில் 10 கடைகளை கருவாடு வியாபாரிகளுக்கும், 10 கடைகளை இறைச்சிக் கடைகளுக்கும், 46 கடைகளை மீன் வியாபாரிகளுக்கும் என ஒதுக்க வேண்டும் என மீன் வியாபாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் ஏலத்தில் பங்கேற்க மீன் வியாபாரிகள் அல்லாதவர்களும், நிதி நிறுவனம் நடத்தி வரும் சிலரும் வைப்புத் தொகையுடன் விண்ணப்பித்துள்ளதாகவும், அரசியல் தலையீடு உள்ளதாகவும் கூறி மீன் வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மீன் வியாபாரிகள் குடும்பத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவை மீன் வியாபாரிகள் நல சங்கத் தலைவர் எம்.பி.சுபேர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். கோரிக்கை ஏற்கப்படாததால் மீன் வியாபாரிகள் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மீன் வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் சுபேர் கூறியது:

உக்கடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மீன் கடைகளை, பழைய கட்டத்தில் இருக்கும் மீன் வியாபாரிகளுக்குத் தான் தரவேண்டும். மீன் வியாபாரம் செய்யாதவர்களும் அரசியல் தலையீட்டால் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். இதுபற்றி முறையிட்டும் நியாயம் கிடைக்கவில்லை.

ஏலத்தில் பங்கேற்பதற்காக மீன் வியாபாரிகள் விண்ணப்பித்துள்ள வைப்புத் தொகை வங்கி வரைவோலையை திரும்ப வழங்குமாறு கேட்டோம். ஏலம் முடிந்த பின்னர் தான் தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மீன் வியாபாரிகள், பழைய கட்டடத்திலேயே மீன் வியாபாரம் செய்ய முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீஸôர் கைது செய்தனர். இவர்கள் சுங்கம் பகுதி திருமண மண்டத்தில் தங்க வைக்கப்பட்டனர்.