Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

605 உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நெல்லையில் இன்று தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் பேட்டி

Print PDF

மாலை மலர் 29.08.2009

605 உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நெல்லையில் இன்று தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் பேட்டி

நெல்லை, ஆக. 29-

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்இன்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ஜெயராமன், நெல்லை மண்டல நகராட்சிகளின் இணை இயக்குனர் மோகன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கிராம பகுதிகளில் 508 ஊராட்சி பதவிகளும், நகர் புறங்களில் 97 கவுன்சிலர் பதவிகளுமாக மொத்தம் 605 உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. இப்பதவிகளுக்கு வருகிற அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படும்.

நெல்லை மாவட்டத்தில் மானூர் யூனியன் கவுன்சிலர், தென்காசி நகராட்சி கவுன்சிலர், செந்தட்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் 11 கிராமபுற வார்டுகள் ஆகிய 14 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது.

கிராம பகுதிகளில் வாக்கு சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும். நகர்புறங்களுக்கு எந்திரம் மூலம் தேர்தல் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கு எந்திரம் மூலம் தேர்தல் நடத்த ரூ.200கோடி செலவாகும். இதை அரசிடம் கேட்டுள்ளோம். அரசு ரூ.200 கோடி ஒதுக்கினால் 2011 உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வாக்குபதிவும் எந்திரம் மூலம் நடத்தப்படும்.

தமிழகத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 3 ஆயிரம் பேர் தங்கள் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வில்லை. இதனால் 3 ஆயிரம் பேர் இந்த இடை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாக்காளர் பட்டியலை சரி பார்த்து பெயர்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இண்டர்நெட்டில் புதிய தகவல்களை சேர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல்களில் தொகுதி மறு சீரமைப்பு செய்வதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

2 அடுக்கு தேர்தல் முறை கொண்டு வருவது குறித்தும் அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.