Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவொற்றியூர் நகராட்சி டெண்டர் வழங்குவதில் தொடரும் சிண்டிகேட்!

Print PDF

தினமணி            10.12.2010

திருவொற்றியூர் நகராட்சி டெண்டர் வழங்குவதில் தொடரும் சிண்டிகேட்!

திருவொற்றியூர், டிச. 9: திருவொற்றியூர் நகராட்சி ஒப்பந்தப் பணிகளில் தொடர்ந்து சிண்டிகேட் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் தகுதியான ஒப்பந்ததாரர்களுக்கு முறையான வகையில் கிடைக்க வேண்டிய ஒப்பந்தங்கள் கிடைக்காமல் போவதுடன் நகராட்சிக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

முக்கிய நகராட்சிகளில் ஒன்று திருவொற்றியூர் நகராட்சி. ஆண்டுக்கு சுமார் ரூ25 கோடி வரை நிதி வருவாய் உள்ளது.

இந்த நகராட்சியில் டெண்டர் விடுவதில் நீண்ட நாள்களாகவே பிரச்னை உள்ளது. அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் சிண்டிகேட் அமைத்து டெண்டரில் பங்கேற்று வந்தனர். சிண்டிகேட்டை மீறி டெண்டரில் பங்கேற்றால் அவர்களின் படிவங்கள் கிழித்தெரிந்ததும், டெண்டர் பெட்டியில் தண்ணீரை ஊற்றிய சம்பவங்களும் நகராட்சியில் நடந்து வந்தன.

மேலும் டெண்டர் பணிகளுக்கு சுமார் 30 சதவீதம் வரை கமிஷன் வழங்க வேண்டியிருப்பதாகவும் தகுதியான ஒப்பந்ததாரர்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை உள்ளதாகவும் துணை முதல்வரிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. திருவொற்றியூர் நகராட்சிக்கான அனைத்து டெண்டர்களும் இனிமேல் செங்கல்பட்டில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலத்தில் மட்டுமே நடைபெறும் என இரு மாதங்களுக்கு முன்பு அரசு உத்தரவிட்டது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கை ஒப்பந்ததாரரின் சிண்டிகேட்டினை ஒழிக்க இயலாத நிலையே தொடர்கிறது என ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.

அடி, உதை: இந்நிலையில் கடந்த டிச.3-ல் திருவொற்றியூர் நகராட்சியில் சாலைகள் சீரமைப்பதற்கான 20 பணிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப்பீட்டிற்கு செங்கல்பட்டில் டெண்டர் தேர்வு நடைபெற்றது. இதில் சிண்டிகேட் காரணமாக பெரும்பாலான பணிகளுக்கு இரண்டு பேர் வீதமே விண்ணப்பித்திருந்தனர். இதில் திருவொற்றியூர் துலுக்கானம் தெருவைச் சேர்ந்த பி.முத்தையா என்ற ஒப்பந்ததாரர் சுமார் ரூ.9 லட்சத்திற்கான வேலைகளுக்கு டெண்டர் போட வந்துள்ளார். அவரை வழி மறித்த ஒரு கும்பல் சிண்டிகேட்டினை மீறி டெண்டர் போடக்கூடாது என மிரட்டியுள்ளனர். ஆனாலும் அடையாளம் தெரியாத வேறு ஒருவர் மூலம் பெட்டியில் படிவத்தை முத்தையா போட்டுவிட்டார்.

இந்நிலையில் டெண்டர் பிரிக்கப்பட்டதில் குறைவான மதிப்பீடு காரணமாக அந்த வேலை முத்தையாவிற்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியாணையை வாங்குவதற்காக முத்தையா திருவொற்றியூர் நகராட்சி அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்துள்ளார். அப்போது முத்தையாவை கும்பலாகச் சேர்ந்து சிலர் தாக்கி உள்ளனர்.

இது குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் முத்தையா வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார். முத்தையா தாக்கப்பட்ட சம்பவம் திருவொற்றியூர் ஒப்பந்ததாரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.