Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெருக்களில் திரியும் நாய், பன்றி, குரங்கு பிடிக்கப்படும் : பேரூராட்சி கூட்டத்தில் தகவல்

Print PDF

தினகரன்               15.12.2010

தெருக்களில் திரியும் நாய், பன்றி, குரங்கு பிடிக்கப்படும் : பேரூராட்சி கூட்டத்தில் தகவல்

சீர்காழி, டிச. 15: சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி கூட்டம் மன்ற கூடத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் அன்புசெழியன், செயல் அலுவலர் தங்கையன் முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை பாரதிமோகன் வாசித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர் மூர்த்தி பேசுகையில், அனுமதி பெறாத மனைகளுக்கு வீடுகட்ட எப்படி அனுமதி வழங்கினீர்கள் என்றார். கவுன்சிலர் சுந்தரமூர்த்தி பேசுகையில், வீடுகட்ட அனுமதி வழங்கும் போது கழிவு நீர் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்த பின் அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் சரவணன் பேசுகையில், குடிநீர் குழாயில் புழுக்கள் கலந்து வருகிறது. குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுகிறதா இல்லையா. தெருக்களில் திரியும் நாய்கள், பன்றிகள், குரங்குகளால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளதால் இவற்றை உடனே பிடிக்கவேண்டும்.

இல்லாவிட்டால் பேரூராட்சி மன்றம் முன் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். கவுன்சிலர் நாடிராஜேந்திரன் பேசுகையில், கறிக்கடை, கட்டண கழிப்பறை, வாகன வரி வசூல் ஆகியவறை பொது ஏலம் விடவேண்டும் என்றார்.

கவுன்சிலர் செந்தில்முருகன் பேசுகையில், தீர்மான நகல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சியில் உள்ள கருவை முள் புதர்களை அகற்றவேண்டும் என்றார். கவுன்சிலர் கோவிந்தராஜ் பேசுகையில், மேல்பாதி சாலையை சீர்செய்ய வேண்டும் என்றார். கவுன்சிலர் அலெக்ஸாண்டர் பேசுகையில், தீர்மான நகல்கள் வெளி நபர்களுக்கு எப்படி செல்கிறது.

இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். துணை தலைவர் அன்புசெழியன் பேசுகையில், பேரூராட்சி பகுதியில் பைப் லைன் போட்ட ஒப்பந்ததாரருக்கு உரிய தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பேரூராட்சி தலைவர் மோகன்ராஜ் பேசுகையில், வீடு கட்ட அனுமதி பெறாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேல சன்னதி தெருவில் பாதையை அடைத்து கடை கட்டியுள்ளனர். கோயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.

எனவே பேரூராட்சி மூலம் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். நாய், பன்றி, குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.