Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி இல்லை செங்கல்பட்டு நகராட்சி அறிவிப்பு

Print PDF
தினகரன்        16.12.2010

பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி இல்லை செங்கல்பட்டு நகராட்சி அறிவிப்பு

செங்கல்பட்டு, டிச. 16: செங்கல்பட்டு நகராட்சி கூட்டம், அதன் தலைவர் ஜெயா தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் கிரிபாபு, ஆணையர் (பொறுப்பு) சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

சுரேஷ் (தேமுதிக): 1வது வார்டு ஜேசிகே நகரில் அம்மன் கோயில் கட்ட அனுமதி தர வேண்டும்.

ஆணையர்: கோயில் கட்ட அனுமதி கேட்கும் இடம் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கோயில் கட்ட அனுமதிக்க முடியாது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தேமுதிக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், ‘அண்ணாநகர், வேதாசலம் நகர் பகுதியில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பிளாட் போட்டு சிலர் விற்றுள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என கேட்டனர்.

ஆணையர்: முன்பு நடந்த சம்பவத்தை முன்னுதாரணமாக காட்ட வேண்டாம். பூங்கா அமைக்கும் இடத்தில் கோயில் கட்ட அனுமதி இல்லை. மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், காணாமல் போன பூங்கா குறித்து ஆய்வு செய்யப்படும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அலமேலு (மதிமுக): எனது வார்டில் 2 வாரங்களாக குடிநீர் வரவில்லை. குப்பை மலைபோல் குவிந்துள்ளது.

ஆணையர்: நகர் முழுவதும் ஒழுங்காக குப்பை அள்ளப்படுகிறது.
(இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்து கவுன்சிலர்களும், ‘அவைக்கு தவறான தகவல் தரக்கூடாது’ என கோஷமிட்டனர்).

தொடர்ந்து பேசிய ஆணையர், ‘நகராட்சியில் வரும் வருமானத்தில் பாதி, நிர்வாக செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் வேலைக்கு புதிதாக அட்களை அமர்த்த முடியாது. வேண்டுமானால் ஒரு பகுதியில் மட்டும் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு வழங்கலாம்’ என்றார்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.

மழைநீர் வடிகால்வாய், சாலைகள் அமைப்பது மற்றும் குடிநீர் விநியோகம் குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே அடிக்கடி தகராறு நடக்கிறது. இதை தடுக்கும் வகையில் மன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்க நகராட்சிகள் மண்டல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று நடந்த மன்ற கூட்டம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.