Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அடுத்த மாதம் தொடக்கம் மாநகராட்சி பூங்காக்களில் இலவச யோகா பயிற்சி

Print PDF

தினகரன்       17.12.2010

அடுத்த மாதம் தொடக்கம் மாநகராட்சி பூங்காக்களில் இலவச யோகா பயிற்சி

சென்னை, டிச.17: மாநகராட்சி பூங்காக்களில் அடுத்த மாதம் முதல், இலவசமாக யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோட்டூர்புரம், தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு அருகே நவீன உடற்பயிற்சிக்கூடம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசியதாவது:

மாநகராட்சி உடற்பயிற்சிக் கூடங்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் மாநகராட்சி சார்பில் 70 உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று 71வது உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதற்காக 228 விளையாட்டுத் திடல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரூ. 1.74 கோடியில் உபகரணங்கள், கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டுத் திடல்கள் ரூ. 52 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. உலகத்தரத்திற்கு இணையாக ரூ. 1.59 கோடியில் 2 நீச்சல் குளங்கள் பூங்கா நகரில் உள்ள மைலேடிஸ் பூங்காவில் திறக்கப்பட்டுள்ளன.

அந்தந்த பகுதியில் இளைஞர்கள் ஒன்றுகூடி சங்கம் அமைத்து உடற்பயிற்சிக்கூடங்களை பராமரிக்க வேண்டும். 26 மாநகராட்சி பூங்காக்களில் யோகா மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மாநகராட்சி பகுதி ஆசிரியர்கள் மூலம் இலவசமாக யோகா பயிற்சிகள் கற்றுத்தரப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளிப்பது சென்னை மாநகராட்சி மட்டுமே. இந்த பயிற்சி ஜனவரி 20ம் தேதிக்குள் தொடங்கப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.