Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இரவு கூடாரங்களில் அடிப்படை வசதி செய்து தர உயர் நீதிமன்றம் உத்தரவு

Print PDF
தினமலர்        17.12.2010

இரவு கூடாரங்களில் அடிப்படை வசதி செய்து தர உயர் நீதிமன்றம் உத்தரவு


புதுடெலி, டிச.17: இரவுக் கூடாரங்களில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி, டெல்லி மேம்பாட்டு ஆணையம், குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. அப்போது பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த இரவு நேர கூடாரங்களும் இடித்து தள்ளப்பட்டன. இதனால் வீடு இல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட கைம்பெண்கள் ஆகியோர் தங்க இடம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டனர். எனவே அவர்கள் தங்குவதற்காக, இரவு நேர கூடாரங்களை உள்ளாட்சி அமைப்புக்கள் ஏற்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஜனவரி மாதம் உத்தரவிட்டது.

அதன்படி டெல்லியில் மொத்தம் 84 இடங்களில் இரவு நேர கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இரவு நேர கூடாரங்களில் குடிநீர், மின் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த ‘அடிப்படை வசதிகள் எதுவும் அங்கு இல்லை’ என்று செய்திகள் வெளியாயின. அதையே ஆதாரமாக கொண்டு, மாநகராட்சி, டெல்லி மேம்பாட்டு ஆணையம், குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி கவுன்சில் மீது உயர் நீதிமன்றம் ஒரு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

அந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:

நகரில் கட்டப்பட்டுள்ள 84 இரவு நேர கூடாரங்களிலும் போதுமான அடிப்படை வசதி எதுவும் செய்து தரப்படவில்லை. குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பிடம் போன்ற எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை.

இதற்கு காரணம், மாநகராட்சி, நகராட்சி கவுன்சில், குடிநீர் வாரியம், டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஆகிய அமைப்புக்களிடையே சரியான ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் இல்லாததுதான். அதனால்தான் இரவு நேர கூடாரங்களில் போதுமான வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லை.

எனவே அடுத்த விசாரணைக்குள் இந்த வசதிகள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புக்கள் செய்து தரவேண்டும்.

அதற்கிடையே இப்பணிகளை செய்வது பற்றி ஆலோசிக்க மாநகராட்சி, நகராட்சி கவுன்சில், குடிநீர் வாரியம், டெல்லி மேம்பாட்டு ஆணைய உயர் அதிகாரிகளின் கூட்டத்துக்கு அரசு தலைமை செயலாளர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அத்துடன் அடுத்த விசாரணையின் போது இரவு நேரக் கூடாரங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் பற்றி நீதிமன்றத்தில் இந்த அமைப்புக்கள் தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.