Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி மாநகராட்சி நிர்வாகம் முன்னேற்பாடு பணிகள்

Print PDF

தினமலர்       17.12.2010

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி மாநகராட்சி நிர்வாகம் முன்னேற்பாடு பணிகள்

திருச்சி: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி மூலம்  மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளை  மேயர், கமிஷனர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து, ராபத்து என்று கொண்டாடப்படுகிறது. இவ்விழா கடந்த ஆறாம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. விழாவுக்காக மாநகராட்சி மூலம் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்மாமண்டபம் படித்துறை மற்றும் மண்டபத்தின் நடைபாதை ரெங்கநாதர் பஸ் ஸ்டாப், புலி மண்டபம் சாலை போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்காலிக சவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

அம்மா மண்டபம் சாலை குடிநீர் தொட்டி அருகே, அம்மா மண்டபம் எஸ்.என்., திருமண மண்டபம் அருகே மற்றும் ரெங்கநாதர் கோவில் உள்புறம் ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளன. கீழ உத்தரவீதி, வடக்கு உத்தரவீதி ஆகிய இரண்டு இடங்களில் தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. ரெங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் தொடர்ந்து தூய்மையாக வைத்திருக்க 200 சிறப்பு துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், மாநகராட்சி இதர கோட்டங்களில் இருந்து துப்புரவுப் பணியாளர்களை சிறப்பு பணியாக பணியமர்த்தி தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகை நாளான்று வெளியூர் பக்தர்கள் அதிகமாக வருவதையொட்டி ஸ்ரீரங்கம் பகுதியை தவிர மாநகரின் முக்கிய பகுதிகளான ரயில்வே ஜங்ஷன் வெளிப்புற பகுதி, மத்திய பஸ் ஸ்டாண்டு, சத்திரம் பஸ் ஸ்டாண்டு மற்றும் நகரின் முக்கிய சாலைகளையும் தூய்மையாக பராமரிக்கவும், பொதுமக்களால் சாலையோரங்களில் போடப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற துப்புரவுப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தி குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். கோட்டத் தலைவர் குமரேசன், கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, கனகராஜ், விஜயலட்சுமி, உதவி கமிஷனர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் பாலகுருநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.