Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சி வார்டுகள் 200 ஆக உயர்த்தி அவசர சட்டம்

Print PDF

தினமலர்     22.12.2010

சென்னை மாநகராட்சி வார்டுகள் 200 ஆக உயர்த்தி அவசர சட்டம்

சென்னை:சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தி அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி யில், தற்போது 155 வார்டுகள் உள்ளன. சென்னை மாநகராட்சி சட்டத்திலும், 155 வார்டுகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னையின் சுற்றுப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அருகில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இணைக்க முடிவு செய்யப்பட்டது.இதன்படி, சென்னையை ஒட்டி யுள்ள கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், உள்ளகரம் - புழுதிவாக்கம் ஆகிய நகராட்சிகளை, சென்னை மாநகராட்சியுடன் இணைத்து உத்தரவிடப்பட்டது. இதேபோல, சின்ன சேக்காடு, புழல், போரூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளி கரணை, சோழிங்கநல்லூர் ஆகிய பேரூராட்சிகளையும், 25 ஊராட்சிகளையும் சென்னை மாநகராட்சியுடன் இணைத்து உத்தரவிடப்பட்டது.

எனினும், புதிதாக இணைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகள் பிரிப்பு, அடுத்து நடக்கும் உள்ளாட்சி பொதுத்தேர்தலின் போது தான் அமலுக்கு வரும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தனை உள்ளாட்சிகளை இணைப்பதால், அதற்கேற்ப வார்டுகளின் எண் ணிக்கையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.மிக அதிகளவில் வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தினால், கவுன்சில் கூட்டம் நடத்துவதில் சிக்கல் மட்டுமன்றி, நிர்வாக ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்று கருதப்பட்டது.

இதையடுத்து, ஒட்டுமொத்த வார்டுகளின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்கேற்ப, அவசர சட்டம் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சட்டத்தில், வார்டுகளின் எண்ணிக்கை 155 என்று இருப்பதற்கு பதிலாக, 200 என்று மாற்றம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சென்னை மாநகராட்சியில் தற்போதுள்ள வார்டுகளின் அளவில் மாற்றம் ஏற்படும். தற்போது 155 வார்டுகள் உள்ள நிலையில், இவற்றில் பல வார்டுகளை இணைத்து, 75 முதல் 80 வார்டுகளாக குறைக்கப்படும்.இதுதவிர, சென்னையுடன் இணைக்கப்படும் இதர நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளின் வார்டுகளிலும் மாற்றம் செய்யப்படும். இதன்படி, தற்போது போரூர், மீனம்பாக்கம், சோழிங்நல்லூர் போன்ற பேரூராட்சிகள் ஒவ்வொன்றிலும் 20 வார்டுகள் வரையுள்ள நிலை மாறி, ஒரு பேரூராட்சிக்கு ஒரு வார்டு என்ற நிலை ஏற்படும்.சென்னையுடன் இணைக்கப்படும் மாநகராட்சிக்கு, பேரூராட்சியில் இருந்து ஒரு கவுன்சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்.ஊராட்சிகளை பொறுத்தவரை, மூன்று அல்லது நான்கு ஊராட்சிகளுக்கு ஒரு கவுன்சிலர் வீதம் தான் இடம் பெற முடியும்.தற்போது மாதவரம், மணலி, அம்பத்தூர் போன்ற மிகப்பெரிய நகராட்சிகளில் உள்ள கவுன்சிலர்கள் எண்ணிக்கை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படும் நிலையில், ஒரு நகராட்சிக்கு அதிகபட்சம் இரண்டு கவுன்சிலர்கள் தான் இடம் பெறுவர். இதற்கேற்ப, வார்டுகளை பிரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.வார்டுகள் பிரிப்பது பற்றிய வரைவு அறிக்கையும் அரசிடம் தயாராக உள்ளது. எனினும், அடுத்தாண்டு நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு தான், இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.