Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இன்று பரிசீலனை : உள்ளாட்சி இடைத்தேர்தல் 1053 பேர் வேட்புமனு

Print PDF

தினகரன்      30.12.2010

இன்று பரிசீலனை : உள்ளாட்சி இடைத்தேர்தல் 1053 பேர் வேட்புமனு

சென்னை, டிச. 30:

தமிழகம் முழுவதும் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் 1053 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி வார்டு 93, மதுரை மாநகராட்சி வார்டு 45, ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 5 உள்பட தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 523 இடங்கள் காலியாக உள்ளன.

காலியிடங்களுக்கான தேர்தல் ஜனவரி 10ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக கடந்த 22ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு வார்டிலும் சுயேட்சைகள் அதிக அளவில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். திமுகவை தவிர இதுவரை எந்த கட்சியினரும், உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு தங்களுடைய வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

வேட்பு மனுதாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். இதனை முன்னிட்டு நேற்று சென்னையில் 1 வேட்பாளரும், மதுரையில் 4 வேட்பாளர்களும், ஈரோட்டில் 7 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தமுள்ள 523 இடங்களின் நேற்று மட்டும் 587 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை இந்த 523 இடங்களுக்கும் 1,053 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. பரிசீலனைக்கு பின்னர் ஜனவரி 10ம் தேதி வாக்குபதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் 12ம் தேதி எண்ணப்பட்டு 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். ஜனவரி 3ம் தேதி வேட்புமனுவை வாபஸ் வாங்க கடைசி நாள். தேர்தல் பணிகளை கவனிக்க சென்னை, மதுரை வார்டுகளுக்கு மட்டும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரியும், ஈரோடு மாநகராட்சிக்கு மாவட்ட வரு வாய் அலுவலர் ஒருவரையும் தேர்தல் பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

போட்டியின்றி தேர்வு?

சென்னையில் நேற்று 93 வது வார்டுக்கு திமுக பெண் வேட்பாளர் அருண்மொழி வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் 93வது வார்டில் உறுப்பினராக இருந்து மறைந்த சேரனின் மனைவி ஆவார். வேட்புமனு தாக்கல் செய்ய நேற்றுதான் கடைசி நாள். 93வது வார்டுக்கு அருண்மொழி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.