Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சி விரிவாக்கம் தள்ளிவைப்பு

Print PDF

தினமலர்         31.12.2010

சென்னை மாநகராட்சி விரிவாக்கம் தள்ளிவைப்பு

சென்னை : "புறநகர் பகுதிகளை இணைத்து, சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும் திட்டம், தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது' என, மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின், பரப்பளவை அதிகப்படுத்தும் வகையில், புறநகர் பகுதிகளில் உள்ள, 25 ஊராட்சிகள், எட்டு பேரூராட்சிகள், ஒன்பது நகராட்சிகளை இணைத்து 200 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்கள் கருத்து கேட்க தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு, கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பிரிக்கப்பட்ட வார்டுகளின் தெருக்கள் விவரம், முழுமையாக குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால், நேற்று மாநகராட்சி கூட்டம் தொடங்கியதும், மேயர் சுப்ரமணியன் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்க தீர்மானம் தள்ளி வைக்கப்படுவதாக, தெரிவித்தார். தொடர்ந்து, மேயர் கூறியதாவது: தற்போது சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 173 சதுர கி.மீ., இந்தியாவில் உள்ள டில்லி, மும்பை போன்ற மாநகராட்சியுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவான பரப்பளவை கொண்ட நகரமாக சென்னை இருப்பதால், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறையக் கூடாது என்ற வகையில், புறநகர் பகுதிகளை இணைத்து சென்னை மாநகராட்சி விரிவாக்கப்பட உள்ளது. புதிதாக மாநகராட்சியில், இணைக்கப்படும் பகுதிகளில், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள 3,871 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, கவுன்சிலர்கள் சிலர், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மாநகராட்சியில் பிரிக்கப்பட்டுள்ள வார்டுகளின் எல்லை விவரம் தெருக்களின் விவரத்தை, முழுமையாக தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதில், குளறுபடி இருப்பதாக கவுன்சிலர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, விரிவாக்க திட்டம் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. மீண்டும், கவுன்சிலர்களின் கருத்து கேட்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். இவ்வாறு சுப்ரமணியன் தெரிவித்தார். பா..., எதிர்ப்பு: சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவது குறித்து மாநகராட்சி பா..., தலைவர் ஜெயராமன் கூறியதாவது: சென்னை மாநகராட்சியை விரிவுபடுத்துவதை தவிர்த்து, புறநகர் பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சி உருவாக்க வேண்டும். புறநகர் பகுதிகளில் உள்ள அம்பத்தூர், தாம்பரம், திருவொற்றியூர், ஆகிய இடங்களை தலைமை இடமாக கொண்டு மாநகராட்சிகளை உருவாக்க வேண்டும். சென்னை மாநகராட்சி புதிதாக இணைக்கும் பகுதிகளிலும், தற்போது 800 மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். இந்த பகுதிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்தால், 200 மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். இதனால், திட்டப் பணிகள் மேற்கொள்வதில், நிர்வாக சிக்கல்கள் ஏற்படும். இவ்வாறு ஜெயராமன் கூறினார். சென்னை மாநகராட்சி விரிவாக்க திட்டம், பொதுத்தேர்தலுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது. பல வார்டுகளை இணைத்து புதிய வார்டுகளை உருவாக்கியிருப்பதால், தற்போதைய சென்னை மாநகராட்சியில் மட்டும், 48 வார்டுகள் குறைந்துள்ளன. அது போல், புறநகர் பகுதிகளில், வார்டுகளை இணைப்பதால், 500க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவி இழப்பு ஏற்படுகிறது. சட்டசபை தேர்தல் வரும் நேரத்தில், சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதால், ஆளுங்கட்சி பிரமுகர்களிடம் குழப்பம் ஏற்படும். தேர்தல் பணியில் சரி வர ஈடுபடமாட்டார்கள் என்பதால், விரிவாக்க திட்டத்தை தள்ளி வைக்கும் படி, மேலிடத்தில் இருந்து, மேயருக்கு உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.