Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

523 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல்: 13 பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்பட 319 பேர் போட்டியின்றித் தேர்வு

Print PDF

தினமணி      04.01.2011

523 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல்: 13 பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்பட 319 பேர் போட்டியின்றித் தேர்வு


சென்னை, ஜன.3: தமிழகத்தில் காலியாக உள்ள 523 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தலில் 10 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 13 பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்பட 319 பதவியிடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள 137 பதவியிடங்களுக்கான இடைத்தேர்தலில் 372 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 26 இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட 103 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

 இதில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 44 பேர் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். 10 இடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 16 இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் 43 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 69 பஞ்சாயத்துத் தலைவர் பதவி: 69 பஞ்சாயத்துத் தலைவர் பதவியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில் 254 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

 இதில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 88 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. 13 இடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 8 இடங்களுக்கான தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை. 48 இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் 143 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 376 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்: 376 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 561 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 145 பேர் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். 274 பதவியிடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 52 இடங்களுக்கு யாரும் போட்டியிடவில்லை. 50 இடங்களுக்கான தேர்தலில் 123 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 சென்னையில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு: சென்னை, மதுரை, ஈரோடு மாநகராட்சிகளில் காலியாக உள்ள தலா ஒரு பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதில், சென்னை மாநகராட்சி 93-வது வார்டு உறுப்பினராக திமுகவை சேர்ந்த அருண்மொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

 சென்னை நீங்கலாக, மதுரை மாநகராட்சியில் 45-வது வார்டு, ஈரோடு மாநகராட்சியில் 5-வது வார்டு ஆகியவற்றுக்கான தேர்தலில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 4 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதற்கான தேர்தலில் 7 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 6 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவி: 6 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 1 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 6 பேர் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 3 இடங்களுக்கான தேர்தலில் 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 மூன்றாம் நிலை நகராட்சி: மூன்றாம் நிலை நகராட்சிகளில் 7 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதில், 16 மனுக்கள் தாக்கலாயின. இதில் 1 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 6 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. 1 இடத்துக்கான வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

 யாரும் போட்டியிடாததால் 3 இடங்களுக்கான தேர்தல் நடைபெறாது. எஞ்சிய 3 இடங்களுக்கான தேர்தலில் 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 பேரூராட்சி: பேரூராட்சிகளில் காலியாக உள்ள 36 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதில் 90 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 இதில் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 27 பேர் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். 17 இடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 4 இடங்களுக்கு யாரும் போட்டியிடவில்லை.

 இதையடுத்து 15 இடங்களுக்கான தேர்தலில் 42 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 ஊரகம், நகர்ப்புறம் இரண்டிலும் சேர்த்து 137 இடங்களுக்கு வரும் 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான தேர்தலில் 372 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.