Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு வருவாய் துறையினர் ஒதுக்கிய பகுதியில் : குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு

Print PDF
தினகரன்      06.01.2011
 
குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு வருவாய் துறையினர் ஒதுக்கிய பகுதியில் : குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு
 
கூடலூர், ஜன.6:

வருவாய் துறையினர் சுட்டிகாட்டிய பகுதியில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் கூடலூர் நகராட்சிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் கடந்த பல ஆண்டுகளாகவே வனப்பகுதியில் ஆங்காங்கே கொட்டப்பட்டது. ஆனால் குப்பைகளை வனப்பகுதியில் கொட்டக்கூடாது என்று நகராட்சிக்கு வனத்துறை அறிவுறுத்தியது. குப்பைகளை கொட்ட உரிய இடம் கிடைக்காததால் நகராட்சி நிர்வாகம் பல்வேறு இன்னல்களை கடந்த காலங்களில் எதிர்கொண்டு வந்தது.

பாதுகாப்பான முறையில் குப்பைகளை ஓரிடத்தில் கொட்டி உரம் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாகவே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் கூடலூர் வருவாய் துறையினர் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செலுக்காடி கிராமத்தில் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்த வருவாய் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி குப்பைகளை கொட்டி உரமாக்கும் பணிகளை மேற்கொள்ள கூடலூர் நகராட்சிக்கு இடத்தை ஒதுக்கியது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகளை உரமாக்கும் கிடங்கு அமைக்க கூடலூர் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேவர்சோலை பேரூராட்சி 9வது வார்டு உறுப்பினர் வீராசாமி, தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

குப்பைகளை இப்பகுதியில் கொட்டுவதால் அப்பகுதியில் இருந்து உற்பத்தியாகும் நீர் ஊற்றுகள் மாசடையும். இதனால் இப்பகுதி மக்களின் குடிநீர், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடையும். எனவே வருவாய் துறையினர் இந்த நிலத்தை தவிர்த்து வேறு இடத்தில் நகராட்சி குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். இந்த மனுவின் நகல்கள் கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை கொட்ட இடம் கிடைத்த நிலையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் கூடலூர் நகராட்சிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.