Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கு.க.செய்ய வலியுறுத்தல் தெருநாய் அட்டகாசம் அதிகரிப்பு நகராட்சியில் புகார்கள் குவிகின்றன

Print PDF

தினகரன்       02.02.2011

கு.க.செய்ய வலியுறுத்தல் தெருநாய் அட்டகாசம் அதிகரிப்பு நகராட்சியில் புகார்கள் குவிகின்றன

பொள்ளாச்சி, பிப் 2:

பொள்ளாச்சி நகர பகுதிகளில் தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்யும் திட்டம் கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் இருந்து புகார்கள் அதிகளவில் வரத் துவங்கியுள்ளன.

பொள்ளாச்சி நகரில் உள்ள பெரும்பாலான வார்டுகளிலும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கொல்ல வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். ஆனால் பிராணிகள் நல அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் நாய்களை பிடித்து கொல்ல முடியாது என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்து விட்டது. அதே சமயம் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துவிட்டால் இவற்றின் எண்ணிக்கையை குறைத்து விடலாம் என்று அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனர்.

இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய இரும்பு மார்க்கெட் அருகே, காந்தி மார்க்கெட்டிற்கு பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ. ஒன்றரை லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை அரங்கு கட்டப்பட்டது. தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அங்கு கொண்டு சென்று கு.க. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அப்பகுதியில் குடியிருப்புகள் நிறைந்திருப்பதால் இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நல்லூர் அருகேயுள்ள நகராட்சி குப்பை கிடங்கு மைதானத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை அரங்கு கட்டப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒன்றிரண்டு நாட்கள் அந்த நாய்களை பராமரித்து அதன் பிறகு நகர எல்லைப்பகுதிகளில் கொண்டு சென்று விடவும் திட்டமிடப்பட்டது. கு.க. சிகிச்சை செய்வதற்கென தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கொடுக்கும் பணிக்கு ஏலம் விடப்பட்டது. இதனை ஏலத்தில் எடுத்த ஒப்பந்ததாரர் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கு.க. அறுவை சிகிச்சை செய்யும் இடத்திற்குச் சென்று ஒப்படைத்து வந்தார். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கவுன்சிலர்கள் புகார் எழுப்பியதால் மேற்படி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கு.க. சிகிச்சை செய்யும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது.

இப்பணி முடங்கியுள்ள நிலையில் தற்போது நகரின் பல இடங்களிலும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. தெருவில் நடந்து செல்வோரை கடிப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் அதிகளவில் வரத்துவங்கியுள்ளன. விரைவில் கு.க. திட்டத்தை செயல்படுத்தி தெருவில் சுற்றித் திரியும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.