Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவு பணியை ஆய்வு செய்ய குழு: மேயர் தகவல்

Print PDF

தினமலர்     03.02.2011

துப்புரவு பணியை ஆய்வு செய்ய குழு: மேயர் தகவல்

சென்னை : ""ஐகோர்ட் உத்தரவுப்படி, இந்த ஆண்டு இறுதி வரை, "நீல் மெட்டல் பனால்கா' நிறுவனம், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும். இதை ஆய்வு செய்ய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும்,'' என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சி கூட்டம் முடிந்த பின், மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:சென்னை மாநகராட்சியின் புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில், "நீல் மெட்டல் பனால்கா' நிறுவனம் துப்புரவு பணி செய்கிறது. மாநகராட்சியுடனான ஒப்பந்தப்படி, இந்நிறுவனம் ஏழு ஆண்டுகள் துப்புரவு பணி செய்ய வேண்டும். ஆனால், அந்நிறுவனம் சரியாக துப்புரவு பணியை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.அந்த நிறுவனம் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், "இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை, அவர்கள் துப்புரவுப் பணி மேற்கொள்ளலாம்.


அடுத்த ஆண்டு, வேறு நிறுவனத்திற்கு மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கலாம்' என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.ஏற்கனவே, அந்நிறுவனத்துடன் மாநகராட்சி, அனைத்து கட்சி தலைவர்கள் பேச்சு நடத்திய போது, அந்நிறுவனம் கொடுத்த உறுதிமொழியை பின்பற்றவில்லை. மண்டலத்திற்கு 100 தொழிலாளர்கள் புதிதாக நியமிக்க வேண்டும். ஆனால், மொத்தத்தில் இதுவரை 80 தொழிலாளர்களை மட்டுமே நியமித்துள்ளனர்."மாநகராட்சியால், பிடித்தம் செய்துள்ள பணத்தை அந்நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்றும், அந்த பணத்தை அந்நிறுவனத்தினர் குப்பை அகற்றும் பணிக்கு செலவிட வேண்டும்' என்றும் ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.அந்நிறுவனம் எவ்வாறு பணிபுரிகிறது; மாநகராட்சியில் பெறப்படும் பணத்தை, முறையாக செலவிடுகிறதா என்பதை கண்காணிக்க அனைத்து கட்சி கவுன்சிலர்கள் 10 பேர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.இந்த ஆண்டு இறுதியில், "நீல் மெட்டல் பனால்கா' நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுற்றால், அடுத்த ஆண்டு துப்புரவு பணி செய்ய புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய அரசின் அனுமதி பெறுவதற்காகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தென் சென்னையில் ஆதம்பாக்கத்தில் 800 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலம், வில்லிவாக்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை ரயில்வே சுரங்கப் பாதைகள் கட்டுமானப் பணி மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்.மாநகரை, அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 12 கோடியே 23 லட்ச ரூபாய் செலவில், பேருந்து சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வண்ண அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். பள்ளி, கோவில்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்படும். இந்த பணிகள் இரு மாதத்தில் முடியும்.இவ்வாறு மேயர் கூறினார்.கணக்கு சரியா வர்லயே...: மேயர் கூறும்போது, "2001ம் ஆண்டு சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 41 லட்சம் பேர் இருந்தனர். தற்போதைய கணக்கெடுப்பில், 41 லட்சத்து 50 ஆயிரம் பேர் என தெரியவந்தது. 10 ஆண்டில், 50 ஆயிரம் பேர் தான் அதிகரித்து இருப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது. கணக்கெடுப்பு பணியில் பல இடங்கள் விடுபட்டுள்ளது தெரியவந்ததால், பிப்ரவரி 9ம் தேதி முதல் மீண்டும் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி நடத்தப்படும். இதில், 9,505 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என்றார்.