Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகராட்சியில் நாளை முதல்மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

Print PDF

தினமலர்      08.02.2011

சேலம் மாநகராட்சியில் நாளை முதல்மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

சேலம்: சேலம் மாநகராட்சியில் நாளை முதல், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது. மாநகரில், 1,287 ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.நாடு முழுவதும், 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, புதிய திட்டங்களை தீட்டுவது உள்ளிட்டவற்றுக்கு, மக்கள் தொகை புள்ளி விபரம் அவசியம்.நடப்பு, 2011ம் ஆண்டு, 14 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களால், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும், 1,287 ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

கடந்த டிசம்பர் 27 முதல், 2011ம் ஆண்டு ஜனவரி 25 வரை, 188 மேற்பார்வையாளர்கள் மூலம், மண்டலம் வாரியாக கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது பயிற்சி முகாம் முடிந்துள்ள நிலையில், நாளை முதல் வீடு வீடாக சென்று, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும், அதற்கான விண்ணப்பங்கள் தயார் நிலையில் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, புள்ளி விபரங்கள் விடுபடாமலும், துல்லியமாகவும் இருக்கு வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், தனிப்பட்ட நபரின் பெயர், குடும்ப தலைவருக்கு உறவு முறை, இனம், பிறந்த தேதி மற்றும் வயது, தற்போதைய திருமண நிலை, திருமணத்தின் போது வயது, மதம், மாற்றுத்திறன், தாய்மொழி, அறிந்த பிற மொழிகள், எழுத்தறிவு நிலை, கல்வி நிலையம் செல்பவரின் நிலை, அதிகபட்ச கல்வி நிலை, வேலை செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்களின் பண்புகள், இடப்பெயர்ச்சியின் பண்புகள், இனவிருத்தி விபரங்கள் உள்ளிட்ட, 29 கேள்விகள் கேட்கப்பட உள்ளது.கணக்கெடுப்பு பணி ஃபிப்ரவரி 28ம் தேதி நிறைவடைகிறது. கணக்கெடுப்பு பணிக்கு பின், புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் இறந்தவர்கள் குறித்த விபரங்களை பதிவு செய்யும் பணி மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை நடக்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேடு மிக முக்கியமானது. எனவே, பொதுமக்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.