Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வாக்காளர் அடையாள அட்டைகள் மாநகராட்சியில் முடக்கம்

Print PDF

தினமலர்                   29.07.2011

வாக்காளர் அடையாள அட்டைகள் மாநகராட்சியில் முடக்கம்

சேலம் : தமிழக தேர்தல் ஆணையத்திடம் இருந்து, "ஹாலோகிராம்' முத்திரை வர, தாமதம் ஏற்படுவதால், சேலம் மாநகராட்சியில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள், வழங்க முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும், ஒரு ஆண்டாக, புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தேர்தல் பிரிவு அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புதிய வாக்காளர்கள், துணைப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர். சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில், ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே, வழங்கப்பட்ட பெரும்பாலான வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், வயது, பாலினம் மற்றும் முகவரி ஆகியவற்றில் குளறுபடிகள் காணப்பட்டது.

எனவே, பிழை திருத்தம் செய்வதற்கான, 001சி படிவம் விநியோகம் செய்யப்பட்டது. சேலம் மாநகராட்சியில், 15 ரூபாய் கட்டணம் செலுத்தி, பிழையை திருத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. சேலம் மாநகராட்சியில் ஆயிரக்கணக்கானோர், 001சி படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர். ஆனால், சட்டசபை தேர்தல் நெருங்கியதால், தேர்தல் பிரிவு அதிகாரிகளின் கவனம் தேர்தலில் திரும்பியது. எனவே, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், லைசென்ஸ் உள்ளிட்ட தேர்தல் கமிஷன் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்த ஆவணங்களை காட்டி ஓட்டு போட்டனர். சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன், வாக்காளர் அட்டையில் பிழை திருத்தம் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டது. சேலம் மாநகராட்சியில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில், குளறுபடிகள் சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அட்டையில் ஒட்டப்படும், "ஹாலோகிராம்' முத்திரை இல்லாததால், வாக்காளர்களுக்கு வழங்க முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை கேட்டு தினமும், மாநகராட்சிக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தமிழக தேர்தல் ஆணையத்தின் மூலம், சேலம் மாநகராட்சிக்கு ஹாலோகிராம் முத்திரை அனுப்பி வைக்கப்படவில்லை. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்குள் வாக்காளர் அடையாள அட்டையை பெற வேண்டும் என்று வாக்காளர்கள் கருதுகின்றனர். மீண்டும் புதிதாக வாக்காளர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியானால், உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் பணிச்சுமை அதிகரித்து விடும். வாக்காளர்களுக்கு துரிதமாக அட்டை வழங்குவதில் சிக்கல் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Last Updated on Friday, 01 July 2011 06:19