Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம் : மேயரிடம் 30 பேர் புகார் மனு வழங்கல்

Print PDF

தினமலர்           20.12.2011

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம் : மேயரிடம் 30 பேர் புகார் மனு வழங்கல்

திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து 30 பேர் மேயர் ஜெயாவிடம் மனு அளித்தனர். திருச்சி மாநகராட்சி மேயராக ஜெயா பொறுப்பேற்றது முதல் வாரந்தோறும் திங்கட்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த நான்கு வாரங்கள் நடந்த குறைதீர் கூட்டத்தில் 130க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டது. அந்த புகார் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை, மேயரின் உத்தரவுப்படி கடிதம் மூலம் புகார்தாரர்களுக்கு பதில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமையான நேற்று காலையும் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. காலை 10 மணிக்கு துவங்கிய குறைதீர் கூட்டத்தில் மேயர் ஜெயா, துணைமேயர் ஆசிக்மீரா ஆகியோர் மனுக்களை பெற்றனர். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சந்திரன், நகர்நல அலுவலர் சேரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

நேற்றைய குறைதீர் கூட்டத்தில் குப்பை, தேங்கிக்கிடக்கும் சாக்கடையை அகற்றுதல், கொசு மருந்து அடித்தல், சாலை வசதி, குடிநீர் வசதி, ஆக்ரமிப்புகளை அகற்றுதல் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30 பேர் மனு அளித்தனர். சாக்கடை அடைப்பை நீக்குதல், தெரு விளக்குகளை மாற்றுதல் உள்ளிட்ட சிறிய அளவிலான பிரச்னைகள் குறித்து புகார் அளித்தவர்களுக்கு இரண்டு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெயா உறுதி அளித்தார்.

முன்னதாக திருச்சி மாநகராட்சி வளாகத்திலிருந்து, எக்ஸ்னோரா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த திடக்கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மேயர் ஜெயா கொடியசைத்து துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் துணைமேயர் ஆசிக்மீரா, பொன்மலை கோட்டத்தலைவர் மனோகரன், கவுன்சிலர் ஹேமா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.