Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி, நகராட்சிக்கு "முதல்வர்' விருது: தேர்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு

Print PDF

தினமலர்                 27.07.2012

மாநகராட்சி, நகராட்சிக்கு "முதல்வர்' விருது: தேர்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு

சென்னை:சிறப்பாக பணியாற்றும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு விருது வழங்க, உள்ளாட்சித்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்டக்குழுவினை, முதல்வர் ஜெயலலிதா அமைத்துள்ளார்.

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சேவை தரம் உயர, அவற்றுக்கிடையில் ஆக்கப்பூர்வமான போட்டி அவசியம். எனவே, சிறந்த சேவைகள் செய்யும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று "முதல்வர் விருது' வழங்கப்படும் என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.இதில், சிறந்த மாநகராட்சிக்கு, 25 லட்ச ரூபாய், சிறந்த முதல் மூன்று நகராட்சிகளுக்கு, முறையே, 15, 10 மற்றும் ஐந்து லட்ச ரூபாயும், முதல் மூன்று பேரூராட்சிகளுக்கு முறையே, 10, ஐந்து மற்றும் மூன்று லட்ச ரூபாயும் மற்றும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்ய, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலைவராகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத் தலைவர், நகர்மன்ற தலைவர்களின் பேரவைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகவும், நகராட்சி நிர்வாக இயக்குனரை உறுப்பினர்- செயலராகவும் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுவினை நியமித்தும், இதற்கென, 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழு, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் திரட்டப்படும் வருவாய், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வினியோகம், திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள், சாலை மேம்பாடு, மின்சார பயன்பாட்டில் சிக்கனம் மற்றும் தெரு விளக்குகளை தேவையான நேரங்களில் மட்டும் எரியச் செய்தல், திறம்பட்ட நிதி மேலாண்மை ஆகியவற்றை அளவுகோல்களாக கொண்டு, "முதல்வர் விருது'க்கான சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்யும்.இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.