Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகர்கோவில் நகரை அழகுபடுத்த திட்டம்: ஆட்சியர்

Print PDF

தினமணி 03.09.2009

நாகர்கோவில் நகரை அழகுபடுத்த திட்டம்: ஆட்சியர்

நாகர்கோவில், செப். 2: நாகர்கோவில் நகரை அழகுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.

நாகர்கோவில் நகரை அழகுபடுத்தும் முயற்சியாக நகரில் பல்வேறு இடங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ செவ்வாய்க்கிழமை சென்று ஆய்வு செய்தார்.

டெரிக் சந்திப்பு பூங்கா, அதிலிருக்கும் நீரூற்றுகள், பாதைகளை முதலில் அவர் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக சந்திப்பு எதிரேயுள்ள நினைவுத் தூண், டதி மகளிர் மேல்நிலைப் பள்ளி சந்திப்பு ரவுண்டானா உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

பின்னர், நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் உள்ள நகராட்சி பூங்காவுக்குள் சென்று அங்குள்ள நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளையும் ஆட்சியர் பார்த்தார்.

இந்த ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:

நாகர்கோவில் நகரை அழகுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே இங்கு செயல்பட்டுவந்த குழு சீரமைக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்படும். நகராட்சி பூங்கா சீரமைக்கப்படும். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலைய நுழைவு வாயிலில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அண்ணா நூற்றாண்டு விழா வரவேற்பு வளைவு அமைக்கப்படும்.

நகரில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல, நமக்கு நாமே திட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் நகர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.

நாகர்கோவில் நகராட்சி ஆணையர் ஜானகி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.