Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தக்கலையில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசு தடையில்லாச் சான்று வழங்க வேண்டும்

Print PDF

தினமணி 03.09.2009

தக்கலையில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசு தடையில்லாச் சான்று வழங்க வேண்டும்

தக்கலை, செப். 2: தக்கலை-நாகர்கோவில் நெடுஞ்சாலை அருகே விளையாட்டு மைதானம் அமைக்க தடையில்லாச் சான்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பத்மநாபபுரம் நகர்மன்றத் தலைவர் அ. ரேவன்கில் கோரியுள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் மேலும் கூறியதாவது:

பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதி மக்கள் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இதையடுத்து, 6 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதுகுறித்து ரெஜினால்டு எம்எல்ஏவும் பேரவைக் கூட்டத்தில் பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதியில் சிறந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்றார் அவர்.

மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பேரவை மனுக்கள் குழுக் கூட்டத்தில் குழுத் தலைவர் அர. சக்கரபாணி தலைமையில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. இக் குளம் விளையாட்டு மைதானம் அமைக்க சிறந்த இடம் என மாவட்ட விளையாட்டு அலுவலரும் கூறியுள்ளார்.

மாவட்டத்தில் 4 வருவாய் கோட்டங்களான கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய அரசு புறம்போக்குப் பகுதி நீர்நிலைகளில் பல்வேறு நில உரிமை மாற்றம் செய்து பல்வேறு விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும் பயன்பெறும் வகையில் இக் குளத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க நில உரிமை மாற்றம் இல்லாது தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர், துணை முதல்வர், சுற்றுலாத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் மனு அளிப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.