Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செங்கோட்டை நகராட்சி கூட்டம்

Print PDF

தினமலர்                31.07.2012

செங்கோட்டை நகராட்சி கூட்டம்

செங்கோட்டை : செங்கோட்டை நகராட்சி கூட்டம் நடந்தது.

செங்கோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் வக்கீல் மோகனகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கணேசன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரமேஷ் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

சங்கரலிங்கம் : எங்கள் பகுதியில் 5 மாத காலமாக குடிநீர் சீராக வரப்படவில்லை. குடிநீர் சீரமைப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் காட்சி தருகிறது.

தலைவர் : எத்தனை நாட்கள் தண்ணீர் வரவில்லை.

சங்கரலிங்கம் : தண்ணீர் வந்தால் தானே நாட்களை சொல்லலாம்.

இன்ஜினியர் : அப்பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நெடுஞ்சாலைதுறை ரோட்டில் தோண்டப்பட்டுள்ள இரண்டு இடங்களில் உடைப்பு குறித்து பார்க்கப்பட்டுள்ளது. அதில் அவற்றில் உடைப்பு இல்லாத நிலையில் வேறு எங்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் தண்ணீர் சரியாக கிடைக்கப்பெறவில்லை என்றால் தனி லைன் மூலம் குடிநீர் கொடுப்பதற்கான மதிப்பீடு செய்து அதற்கான ஏற்பாடு மேற்கொள்ளலாம்.

சங்கரலிங்கம் : அதுவெல்லாம் இருக்கட்டும். குடிநீர் சப்ளை எங்கள் பகுதிக்கு எப்போது கிடைக்கும் என கூறுங்கள். குழியை தோண்டி போட்டுவிட்டு அப்படியே போய்விட்டனர். முக்கிய பகுதியில் அந்த குழிகள் தோண்டப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். பலமுறை சொல்லியும் இதற்கு பலனில்லை.

இன்ஜினியர் : குடிநீர் சப்ளை விரைவில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைவர் : குறிப்பிட்ட வார்டில் குடிநீர் சப்ளை கிடைக்காததற்கு சரியான குறைபாடு என்ன என்பதை உடனடியாக ஆராயப்படும். மீண்டும் அதற்கான பிரச்னை ஏற்பட்டால் அதற்கு நிரந்தர தீர்வு காணும் ஏற்பாட்டினை நிச்சயமாக மேற்கொள்ளலாம்.

மேரி : எங்களது வார்டில் அடிபம்புகள், பைப்புகள் ஆங்காங்கே பழுதாகி கிடக்கிறது என 15 நாட்களாக புகார் தெரிவித்து வருகிறேன். அடிபம்புகள் எப்போது சீரமைத்து தரப்படும்.

தலைவர் : இந்த வார இறுதிக்குள் அதற்கான பணிகள் நிச்சயமாக செய்து தரப்படும்.

திலகர் : 50 லட்ச ரூபாய் செலவில் தியாகி வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு பணிகள் நடந்து வருகிறது. அவற்றை பொறுத்தவரை மிகவும் ஆமைவேகத்தில் நடந்து வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

தலைவர் : தியாகி வாஞ்சிநாதன் மணிமண்டபம் கட்டும் பணியை பொறுத்தவரை பொதுப்பணித்துறை தான் அதனை மேற்கொண்டு வருகிறது. அதனை முடித்த பிறகு தான் நகராட்சி நிர்வாகத்திடம் மணிமண்டப பராமரிப்பு ஒப்படைக்கப்படும். இருந்தபோதிலும் பணிகளை விரைந்து மேற்கொள்ள பொதுப்பணித்துறைக்கு பரிந்துரை செய்யலாம்.

திலகர் : செங்கோட்டை நகர மையப்பகுதியில் மின்வாரிய அலுவலகம் அமைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.

தலைவர் : இதற்கான பணியினை அமைச்சர் செந்தூர்பாண்டியன் பரிந்துரையின்படி மேற்கொள்ள ஏற்பாடு செய்யலாம்.

ஐயப்பன் : நகராட்சிக்கு சொந்தமான பொதுக் கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தலைவர் : இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐயப்பன் : நகராட்சி கவுன்சில் பதவியேற்பு விழா கடந்த ஜனவரி மாதம் நடந்தபோது விழாவிற்கான செலவினம் என 19 ஆயிரம் ரூபாய்க்கு செக் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணம் உரியவர்களுக்கு இதுவரை பட்டுவாடா செய்யப்படவில்லை.

இன்ஜினியர் : இதுகுறித்து உடனடியாக ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் கோவில் தெரு, முத்துசாமி பூங்கா பகுதியில் சிமென்ட் சாலை, மழைநீர் ஓடை போன்ற பணிகளை மேற்கொள்ள 54 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் ஐயப்பன், குடிநீர் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த நகராட்சி தலைவர், துணைத் தலைவர், நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்ட பணிகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.