Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரப் பணியாளருக்குப் பதவி உயர்வு: பேரூராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Print PDF

தினமணி                   03.08.2012

சுகாதாரப் பணியாளருக்குப் பதவி உயர்வு: பேரூராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஆக. 2: சுகாதாரப் பணியாளருக்குப் பதவி உயர்வு வழங்குமாறு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலருக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இளையான்குடி பேரூராட்சியில் சுகாதாரப் பணியாளராகப் பணிபுரியும் எஸ்.சங்கர் தாக்கல் செய்த மனு விவரம்:

இளையான்குடி பேரூராட்சியில் 1988 செப்.1-ல் சுகாதாரப் பணியாளராக நியமிக்கப்பட்டேன். எனக்கு அடுத்த நிலையில் உள்ள சுகாதார மேற்பார்வையாளர் பணியிடம் 2001-ல் காலியானது.

அப்பணியிடத்துக்கான பணி மூப்பு இருந்தபோதும், நேரடி நியமனத்தில் வேறொருவர் நியமிக்கப்பட்டார்.அதைத்தொடர்ந்து 2002-ல் மேலும் ஒரு மேற்பார்வையாளர் காலிப்பணியிடம் ஏற்பட்டது.

இப்பணியிடத்துக்கு பதவி உயர்வில் நியமனம் செய்ய பரிசீலிக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தேன், எனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு பேரூராட்சி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் பணி நியமன தடைச் சட்டத்தைக் காரணம்கூறி எனக்குப் பதவி உயர்வில் சுகாதார மேற்பார்வையாளர் பணியிடத்தில் நியமிக்க மறுக்கப்பட்டது. இதற்கிடையே 2011-ல் மீண்டும் ஒரு காலிப்பணியிடம் உருவானதையடுத்து அப்பணியிடத்துக்கு எனது பெயரைப் பரிசீலிக்க உத்தவிடுமாறும், வேறு நபர்களை நியமிக்கத் தடை விதிக்குமாறும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அதன்படி, ஜூலை 15-ல் நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.

இந்நிலையில், தடை உத்தரவு பெறப்பட்ட தேதிக்கு முன்தேதியிட்டு மற்றொரு நபரை சுகாதார மேற்பார்வையாளராக பேரூராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது. இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன், பேரூராட்சி நிர்வாகத்தின் நியமன உத்தரவை ரத்து செய்ததோடு, மனுதாரருக்கு சுகாதார மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டார்.