Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"வெள்ளத் தடுப்பு பெருந்திட்டப் பணிகள் மார்ச் இறுதியில் முடியும்'

Print PDF

தினமணி 05.09.2009

"வெள்ளத் தடுப்பு பெருந்திட்டப் பணிகள் மார்ச் இறுதியில் முடியும்'

திருச்சி, செப். 4: திருச்சி மாநகரை வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வெள்ளத் தடுப்புப் பெருந்திட்டப் பணிகள் 60 சதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், வரும் 2010 மார்ச் இறுதிக்குள் முழுமைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தெரிவித்தார்.

வெள்ளக் காலங்களில் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளைப் பாதுகாக்க, திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளை உள்ளடக்கிய வெள்ளத் தடுப்புப் பெருந்திட்டப் பணிகள் ரூ. 251 கோடியில் அறிவிக்கப்பட்டன. இத்திட்டப்படி மொத்தம் 49 பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

காவிரியில் வேலூர்- ஜேடர்பாளையம் முதல், கல்லணை வரை இந்தப் பணிகள் திட்டமிடப்பட்டது.

இதில், திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்துதல் மற்றும் அரியாறு, கோரையாறு, குடமுருட்டியாறு, உய்யகொண்டான் வாய்க்கால் ஆகியவற்றையும் பலப்படுத்தும் 37 பணிகள் ரூ. 195 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் பொதுப் பணித் துறைச் செயற்பொறியாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

முடிவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

காவிரி வலது கரையில் பேட்டைவாய்த்தலை முதல் பெருகமணி வரை 6 கி.மீ. தொலைவுக்கு நான்கரை லட்சம் "சிமென்ட் பிளாக்குகள்' தயாரித்து கரையைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கரைகளில் வலுவிழந்த பகுதிகள் என கிளியநல்லூர், வேங்கூர், மேலூர், கூகூர், நந்தியாறு தலைப்பு, ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் ஆகிய இடங்களில் கரைகளை நிரந்தரமாகப் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி மாவட்ட எல்லையில் காவிரியில் 140 கி.மீ. தொலைவுக்கும், கொள்ளிடம் இடது கரையில் 48 கி.மீ. தொலைவுக்கும், வலது கரையில் 20 கி.மீ. தொலைவுக்கும் கரையைத் தரப்படுத்தி பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி மாவட்டப் பணிகளில் தண்ணீர் இல்லாமல் நடத்த வேண்டிய பணிகள் முடிந்துள்ளன; அதாவது மொத்தத்தில் 60 சதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இனி ஆறுகளில் தண்ணீர் வந்தால்தான், பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலையிலுள்ள மீதமுள்ள 40 சதப் பணிகளும் வரும் 2010, மார்ச் 31-ம் தேதிக்குள் நிறைவு பெறும்.

உய்யகொண்டானில் பெரும்பான்மையான பணிகள் முடிவடைந்து விட்டதால், சம்பா சாகுபடிக்காக வரும் 7-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும்.

புத்தூர் கலிங்கில் ரூ. 7.8 கோடியில் தொட்டிப் பாலம் அமைக்கும் பணிகளை முடிக்க 18 மாதங்கள் காலக்கெடு இருப்பதால், அனேகமாக அடுத்த சம்பாவுக்கு முன்னதாக பணிகள் நிறைவு பெறும்.

13.35 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தி, குடமுருட்டி ஆற்றை அகலப்படுத்தும் பணிகளுக்கு நிலம் அடையாளம் காணப்பட்டு, அந்த இடங்களுக்கான இழப்பீட்டுத் தொகையின் புதிய மதிப்பீடு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் தொடங்கும்'' என்றார் சவுண்டையா.