Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"தூய்மைமிகு திருப்பூர்' உருவாக...சபதம் ஏற்க அழைப்பு : மனசாட்சியோடு பாடுபட அறிவுரை

Print PDF

தினமலர்               16.08.2012

"தூய்மைமிகு திருப்பூர்' உருவாக...சபதம் ஏற்க அழைப்பு : மனசாட்சியோடு பாடுபட அறிவுரை

திருப்பூர் : ""நாட்டுக்கு சுதந்திரம் பெற்ற இந்நாளில், திருப்பூர் மாநகராட்சியில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களை ஒழிக்க ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும். சுத்தமான, சுற்றுப்புறச்சூழலை பேணிக்காக்கும் தேசம் அமையவும், "தூய்மைமிகு திருப்பூர்' அமையவும், மாநகராட்சி அதிகாரிகளும், பணியாளர்களும், ஊழியர்களும், மக்கள் பிரதிநிதிகளும் மனசாட்சி யோடு பாடுபடுவோம் என்று உறுதி ஏற்க வேண்டும்,'' என மேயர் விசாலாட்சி அறிவுறுத்தினார்.கோலாகலம்திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை சார்பில், சுதந்திர தின விழா, சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. முன்னதாக, கலெக்டர் மதிவாணன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

எஸ்.பி., ஆஸ்ரா கர்க் மற்றும் கலெக்டர் ஆகியோர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டனர். தொடர்ந்து, போலீசாரின் பேண்ட் வாத்தியம் முன் செல்ல அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.தேசியக்கொடியின் மூவர்ணங்களை சித்தரிக்கும் வகையில் பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. பின், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் குடும்பத்தினர் 12 பேர் கவுரவிக்கப்பட்டனர்.

துறை வாரியாக சிறப்பாக பணியாற்றியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.போலீஸ் துறையில் டி.எஸ்.பி., - எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் எட்டு பேருக்கும், அரசுத்துறையில் வருவாய், ஊரக வளர்ச்சி, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் தாசில்தார் முதல் துப்புரவு பணியாளர் வரை மொத்தம் 48 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.நலத்திட்ட உதவிபல்வேறு துறைகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய்த்துறை சார்பில் 77 பேருக்கு ஓய்வூதியம்; உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் 46 பேருக்கும், பிற்பட்டோர் நலத்துறை சார்பில் 4 பேருக்கு துணி தேய்க்கும் பெட்டி; ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 91 பேருக்கும், வருவாய்த்துறை சார்பில் 33 பேருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சி துறை சார்பில் 130 பேருக்கு பசுமை வீடு மற்றும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் பணி உத்தரவு; மகளிர் திட்டத்தில் 63 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 1.70 கோடி ரூபாய் சுழல் நிதி; மாவட்ட தொழில் மையம் சார்பில் 10 பேருக்கு சுய தொழில் துவங்க வங்கி கடன்; தாட்கோ நிறுவனம் சார்பில்2 பேருக்கு வாகன கடன் வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 29 பேருக்கு உபகரணங்கள், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை ஆகியன சார்பில் மானியங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 520 பேருக்கு 3.89 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.கலை நிகழ்ச்சிசுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. லிட்டில் பிளவர் பள்ளி, உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கயம் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி, தாயம்பாளையம் வி.எம்.சி.டி.வி., மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் காது கேளாதோர் பள்ளி, கரடிவாவி எஸ்.எல்.என்.எம்., மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாராபுரம் விவேகம் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

வண்ணமயமாக நடந்த இந்நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.மாநகராட்சியில்...திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஜெய்வாபாய் பள்ளி மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மேயர் விசாலாட்சி, தேசியக்கொடி ஏற்றினார். முன்னதாக, மேயர், கமிஷனர் செல்வராஜ், துணை மேயர் குணசேகரன் ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேயர் பேசியதாவது:திருப்பூர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெருக்கவும், சுகாதாரத்தை பேணிக்காக்கவும்,மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.ஒருவர் வீட்டு குப்பையை, அடுத்தவர் வீட்டுக்கு முன் கொட்டுவது சாதாரணமாகி விட்டது. வாழை பழத்தோல் சிதைந்து மக்கிப்போக நான்கு வாரமாகிறது. காகித பை சிதைய ஐந்து வாரங்கள் ஆகின்றன. கந்தல் துணி சிதைய ஐந்து மாதங்கள், பெரிய மரம் சிதைந்துபோக 15 ஆண்டுகள் ஆகின்றன.

ஆனால், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் சிதைய, 10 லட்சம் ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது என மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.நீரில் கரையாமல், நெருப்பால் மறையாமல், மண்ணில் மக்கிப்போகாமல் பயமுறுத்திக் கொண்டிருக் கும் பிளாஸ்டிக் அசுரனை அழிக்க, அனைவரது ஒத்துழைப்பும் தேவை. இன்றைய நிலவரப்படி, திருப்பூரில் தேங்கியுள்ள மக்காத பாலித்தீன் குப்பைகள், மக்களை மக்காக மாற்றிவிடும் ஆபத்துள்ளது.நாட்டுக்கு சுதந்திரம் பெற்ற இந்நாளில், திருப்பூர் மாநகராட்சியில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களை ஒழிக்க ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும்.

சுத்தமான, சுற்றுப்புறச்சூழலை பேணிக்காக்கும் தேசம் அமையவும், "தூய்மைமிகு திருப்பூர்' அமையவும், மாநகராட்சி அதிகாரிகளும், பணியாளர்களும், ஊழியர்களும், மக்கள் பிரதிநிதிகளும் மனசாட்சியோடு பாடுபடுவோம் என்று உறுதி ஏற்க வேண்டும்.இவ்வாறு, மேயர் பேசினார்.முன்னதாக, பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில், இரண்டு பயனாளிகளுக்கு 2.50 லட்சம் ரூபாய் கடன் தொகையும், மூன்று மகளிர் குழுக்களுக்கு 6.10 லட்சம் ரூபாய் கடன் தொகையும் வழங்கப்பட்டது. மேயரின் சொந்த செலவில், ஏழை பெண்கள் இருவருக்கு இலவச தையல் மெஷின், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அதன்பின், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, குமரன் நினைவு இடத்திலும், குமரன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Last Updated on Thursday, 16 August 2012 09:36