Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராஜபாளையம் நகராட்சியில் சுதந்திர தின விழா

Print PDF

தினமணி     16.08.2012

ராஜபாளையம் நகராட்சியில் சுதந்திர தின விழா

ராஜபாளையம், ஆக. 15: ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், புதன்கிழமை சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

நகர்மன்றத் தலைவர் பி.எஸ். தனலட்சுமி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர், ராஜபாளையம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் விளக்கிப் பேசினார்.

துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் பி.பி. செல்வசுப்பிரமணியராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் யோகசேகரன், பாஸ்கரன் உள்பட பலர் பேசினர்.

நகராட்சி ஆணையர் சுல்தானா பேசுகையில், ராஜபாளையம் நகராட்சியில் தரமானசாலை வசதி, மின்விளக்கு வசதி உள்பட மக்களுக்குத் தேவையான பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆண்டில் வார்டுகளில் தரமான சாலை வசதி, வடிநீர் வாருகால் வசதி, கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தித் தர, சுமார் ரூ. 5 கோடி நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இருப்பினும், பல இடங்களில் தெருக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் பொதுக் கழிப்பிடமாகப் பயன்படுத்தப்படுவது வேதனையாக உள்ளது. தங்களது வீட்டைப் போல், தெருக்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கவுன்சிலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். இதில், கன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஆதிமூலம் முன்னிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் கே. கோபால்சாமி தேசியக் கொடியேற்றி வைத்து, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றியத் தலைவர் எ.எஸ். பொன்னுத்தாய் தேசியக் கொடியேற்றி வைத்தார். துணைத் தலைவர் ஊ.கி. குட்டி, திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மெர்சி எஸ்தர் ராணி, மேலாளர் முத்து, மேலப்பாட்டக்கரிசல்குளம் ஊராட்சித் தலைவர் அழகாபுரியான் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில், அனைவருக்கும் சுதந்திர தின சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் நிர்மலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

ராஜபாளையத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், சேத்தூர், செட்டியார்பட்டி பேரூராட்சி ஆகிய இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றிவைத்து, சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

அதேபோன்று, ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியேற்றி வைத்து, கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி, சிதம்பராபுரத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து, இப்பகுதி மக்கள் கிராமசபைக் கூட்டத்தின்போது முற்றுகையிட்டனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்தனர்.