Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூய்மையான நகரமாக தில்லி மாற்றப்படும்: முதல்வர் ஷீலா தீட்சித்

Print PDF

தினமணி                         16.08.2012

தூய்மையான நகரமாக தில்லி மாற்றப்படும்: முதல்வர் ஷீலா தீட்சித்

புது தில்லி, ஆக. 15: சுத்தமான நகரமாக தில்லி மாற்றப்படும் என்றும் அதற்கு தில்லிவாசிகளின் பங்களிப்பு அவசியம் என்றும் சுதந்திர தின உரையில் முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.

தொடர்ந்து 14-வது ஆண்டாக தில்லியின் முதல்வர் பதவியை வகித்துவரும் ஷீலா தீட்சித், சத்ரசல் ஸ்டேடியத்தில் சுதந்திர தின விழாவை ஒட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் திறந்த ஜீப்பில் சென்று தேசிய மாணவர்கள் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

விழாவில் ஷீலா தீட்சித் பேசியது:

கடந்த 14 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மூலம் சர்வதேச நகரம் என்ற தரத்திற்கு தில்லி உயர்ந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்க முடியாத பகுதிகளில் மோனோ ரயில் சேவை அமைக்கப்படும்.

முதல்கட்டமாக சாஸ்திரி பார்க்-திருலோக்புரி பகுதியில் மோனோ ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும். யமுனை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட்டு வரும் சிக்னேச்சர் பாலம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும்.

அனுமதியில்லா 900 காலனிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும். தில்லி பசுமை மிக்க நகரமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி மாணவர்களின் சேவை இன்றியமையாதது.  தலைநகரை சுத்தமான நகராக மாற்ற வேண்டும். அதில், பள்ளி மாணவர்கள், தில்லி வாசிகள் ஆகியோர் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். குடிசைகள் இல்லாத நகரமாக மாற்ற, குறைந்த விலை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் அளிப்பதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தில்லி திகழ்கிறது.

தில்லியைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் அவர் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வார். தில்லியில் விளையாட்டு வீரர்களுக்கு நவீன பயிற்சிகள் அளிப்பதற்கு தேவைப்படும் நிதியை மாநில அரசு வழங்கும்.

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தில் இருந்து 96 சதவீதமாக உயர்நதுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 200 படுக்கைகள் அதிகரிக்கப்படும். கெரசின் பயன்படுத்தாத மாநிலமாக தில்லி மாற்றப்படும். அதற்காக 2 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கப்படும்.

அன்னஸ்ரீ திட்டம் மூலம் சுமார் 1.75 லட்சம் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள வாங்க மாதம் ரூ. 600 வீதம் நிதி வழங்கப்படும். இதன் மூலம் தில்லி பசி இல்லாத மாநிலமாகும்.

மக்களுக்காக மாநில அரசு நிறைவேற்றும் ஏராளமான திட்டங்கள் குறித்த விவரம் மக்களுக்கு சரிவர சென்றடையவில்லை. ஆகையால் அனைத்து மாநில அரசு அலுவலகங்களிலும் தில்லி அரசின் திட்டங்களின் விவரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்படும் என்று ஷீலா தீட்சித் கூறினார்.

பேரூராட்சி அதிகாரிக்கு ஆட்சியர் பாராட்டுகமுதி, ஆக 15: சொத்து வரி வசூல் சாதனையைப் பாராட்டி, அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு, புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் க.நந்தகுமார் விருது வழங்கினார்.

கமுதி அருகே அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.ராஜாராம். இவர் 2011-2012-ம் ஆண்டிற்குரிய சொத்து வரி ரூ.16 லட்சம் முழுவதையும் ஓராண்டிற்குள் வசூல் செய்துள்ளார்.
இதையொட்டி, செயல் அலுவலர் ராஜாராமை ஆட்சியர் நந்தகுமார் பாராட்டி, சுதந்திர தின விழாவில் விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்.