Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துறையூர் நகராட்சி கூட்டத்தில் ஆச்சர்யம்எதிர்ப்பின்றி நிறைவேறிய தீர்மானங்கள்

Print PDF

தினமலர்                       20.08.2012

துறையூர் நகராட்சி கூட்டத்தில் ஆச்சர்யம்எதிர்ப்பின்றி நிறைவேறிய தீர்மானங்கள்

துறையூர்: துறையூர் நகராட்சியில் கவுன்சிலர்கள் "அபூர்வமாக' ஒற்றுமையுடன் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை, அதிகாரிகள், மக்கள் ஒத்துழைப்பு தந்து செயல்படுத்துவார்களா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.துறையூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. 1970க்கு முன் துறையூரில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். நான்கரை லட்சம் கொள்ளளவுடன் இரண்டு டேங்க் கட்டி காசிகுளம், பெரிய ஏரி, சின்ன ஏரியில் போர்வெல் மூலம் நீரை ஏற்றி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, அப்போதைய எம்.எல்.ஏ., அழகமுத்து நடவடிக்கை எடுத்தார். அப்போதே காவிரி குடிநீரை முசிறியிலிருந்து கொண்டு வர ஆய்வு செய்யப்பட்டது.அந்த ஆய்வின்படி 2001ல் துறையூர் நகராட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பழைய இணைப்பு பெற்றிருந்த இரண்டாயிரம் பேருக்கு உடனடியாக காவிரி குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது குடிநீர் மீட்டர் முறை நீக்கி மாதத்துக்கு 80 ரூபாய் குடிநீர் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டது.

ஒரு இணைப்பிலிருந்து எவ்வளவு நீர் பிடித்தாலும் 80 ரூபாய் தான் செலுத்த வேண்டும் என்பதால், சிலர் குழிவெட்டி, மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்ச துவங்கினர்.இதனால் மேடான பகுதியில் உள்ள இணைப்புகளுக்கு போதிய குடிநீர் வராத நிலை ஏற்பட்டதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கவுன்சிலர்கள் சிலரும் முட்டுக்கட்டை போட்டு வந்தனர். இந்நிலையில் புதிய இணைப்புகளும் வழங்கப்பட்டது. தற்போது நான்காயிரம் இணைப்பு உள்ளது.இதில் 60 சதவீத இணைப்பு குழிவெட்டியும், மோட்டார் வைத்து உறிஞ்சியும் குடிநீர் பிடிக்கின்றனர். இதனால் மீதமுள்ள இணைப்புகளில் குடிநீர் வருவதில்லையென மக்கள் அடிக்கடி நகராட்சிக்கு வந்து புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுக்காததற்கு, கவுன்சிலர்கள் சிபாரிசுக்கு வருவதாக அதிகாரிகள் கூறினர்.தற்போதைய நகராட்சியில் தலைவராக முரளி (தி.மு.க.,), திவ்யா (அ.தி.மு.க.,) துணைத்தலைவராகவும் அ.தி.மு.க., ஆறு, தே.மு.தி.க., ஒன்று, சுயேட்சை ஒன்று, காங்கிரஸ் இரண்டு தவிர 13 பேர் தி.மு.க., கவுன்சிலராக இருந்தும் கூட எந்த கூட்டமும் அமைதியாக நடந்ததில்லை. சுமூகமாக தீர்மானமும் நிறைவேற்றியதில்லை.

இந்நிலையில் நேற்று நடந்த அவசர கூட்டத்தில் குடிநீர் குழாய்களை தரைக்கு மேல் தூக்கி போடவும், பழுதான குப்பை லாரியை சரிசெய்யவும், குடிநீர் டேங்கர் லாரி புதிதாக வாங்கவும் தலைவர், துணைத்தலைவர் அனைத்து கவுன்சிலர்கள் "அபூர்வ' ஒற்றுமையுடன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.இத்தீர்மானத்தை அதிகாரிகள், மக்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். இதேபோல் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதாரமான பஸ்ஸ்டாண்ட், ஆக்ரமிப்பு அகற்றம், தினமும் குப்பை அள்ளுவது, சாக்கடை சுத்தம் செய்வது, தெரு விளக்கு பராமரிப்பில் இதே ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

Last Updated on Tuesday, 21 August 2012 05:37