Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் 15 மண்டலங்களில் 5000 நவீன பிளாஸ்டிக் கழிவறைகள் டெண்டர் கோரியது மாநகராட்சி

Print PDF

தினகரன்     22.08.2012

சென்னையில் 15 மண்டலங்களில் 5000 நவீன பிளாஸ்டிக் கழிவறைகள் டெண்டர் கோரியது மாநகராட்சி

சென்னை, : சென்னைக்கு தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அவ்வாறு வருபவர்கள் அவசரமாக கழிப்பிடம் செல்ல வேண்டும் என்றால் தனியார் கழிவறைகளை தான் நாட வேண்டியது உள்ளது.

தனியார் கழிவறைகளில் கட்டணங்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வரிசையில் நின்று கழிப்பிடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், கட்டண கொள்ளையை தடுக்கும் வகை யிலும்,  மக்களுக்கு அடிப்படை தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் புதிதாக 5000 நவீன பிளாஸ்டிக் கழிப்பறைகள் அமைக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னைக்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மண்டலம் 1 முதல் 7 வரை 2000 நவீன கழிப்பறையும், மண்டலம் 8 முதல் 15 வரை 3000 கழிப்பறை வீதம் 5000 நவீன கழிப்பறைகள் அமைக்கப்படுகிறது. நவீன கழிப்பறைகள் பாலி எத்திலின், பாலி கார்பனேட் அல்லது அதற்கு இணையான பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியிலும் 4 முதல் 5 கழிப்பறை வரை வைக்கப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிறுத்தம், வணிக வளாகம், சந்தைகள், வழிப்பாட்டு தலங்கள், மருத்துவமனை, வியாபார பகுதிகளில் கூடுதலாக கழிப்பறைகள் வைக்கப்படும். ஒவ்வொரு  கழிப்பறையும் மின்வசதி, தண்ணீர் வசதியுடன் காற்றோட்டமாக இருக்கும் வகையில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் என்ற முறையில் கழிப்பறைகள் அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். கழிப்பறைகள் அமைப்பதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி மாலை 3 மணி வரை டெண்டர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம்.அன்று மாலை 3 மணிக்கு மேல் டெண்டர் திறக்கப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கழிவறைகளில் நியாயமான முறையில் கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Last Updated on Wednesday, 22 August 2012 11:11