Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் முடிவு

Print PDF

தினமலர்      27.08.2012

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் முடிவு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளை பராமரிக்கும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்காக, ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும், 23 ஆயிரத்து 531 தெருவிளக்குகள் உள்ளன. பழைய மாநகராட்சி எல்லையில் இருந்த 12 ஆயிரத்து 418 தெருவிளக்குகள், கடந்த சில ஆண்டுகளாக தனியார் பராமரிப்பில் உள்ளன.மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 11 ஆயிரத்து 113 தெருவிளக்குகளை, மாநகராட்சி நிர்வாகமே பராமரித்து வருகிறது. போதுமான தொழில்நுட்ப பணியாளர்கள் கைவசம் இல்லாத நிலையில், தெருவிளக்கு பராமரிப்பு பணி நான்கு மண்டலங்களிலும் முறையில்லாமல் நடந்து வருகிறது.நடப்பு நிதியாண்டு துவக்கத்தில், தனியார், அரசு கூட்டு ஒப்பந்தத்தில் தெருவிளக்கு பராமரிப்பை கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு செய்யும்போது, மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ஒன்பது கோடி ரூபாய் அளவுக்கு சேமிப்பு உருவாகும். தனியார் பராமரிப்பு, நவீன மின்சார உபகரணங்கள், தெருவிளக்கு தானியங்கி கருவிகள் உட்பட, அரசு - தனியார் கூட்டு ஒப்பந்தத்துக்கான கருத்துரு அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தெருவிளக்கு பராமரிப்பை தொடர முடியாமல், புதிய பகுதிகளில் உள்ள 11 ஆயிரத்து 113 தெரு விளக்குகளையும், தனியார் பராமரிப்பில் விட மாநகராட்சி உத்தேசித்துள்ளது. அதற்கான செலவு தொகையாக, ஆண்டுக்கு 39.75 லட்சம் ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளது.

மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநகராட்சியில், 23 ஆயிரத்து 531 தெருவிளக்குகள் உள்ளன. அவற்றில், 12 ஆயிரத்து 418 விளக்குகள் தனியார் பராமரிப்பிலும், 11 ஆயிரத்து 113 விளக்குகள் மாநகராட்சி பராமரிப்பிலும் உள்ளன. அரசு, தனியார் கூட்டு ஒப்பந்தம் முறையாக நிறைவேற, ஆறு மாத அவகாசம் தேவை. மின்சேமிப்பு தெருவிளக்கு பராமரிப்பு தொழில்நுட்பத்தை அமல்படுத்த 10 மாத அவகாசம் தேவை.தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாததால், அவ்வளவு நாட்களுக்கு மாநகராட்சியால் தெருவிளக்குகளை பராமரிக்க இயலாது. எனவே, அரசு, தனியார் கூட்டு ஒப்பந்தம் நிறைவேறும் வரை, அனைத்து தெருவிளக்குகளையும், தனியார் பராமரிப்பில் ஒப்படைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 11 ஆயிரத்து 113 விளக்குகளும் ஒராண்டு பராமரிப்புக்காக, தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன, என்றார்.