Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமீறல் குறித்த விவரம் இல்லாத மாநகராட்சி அறிக்கை

Print PDF
தினமலர்                                   03.09.2012

விதிமீறல் குறித்த விவரம் இல்லாத மாநகராட்சி அறிக்கை

கோடம்பாக்கத்தில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்த மாநகராட்சியின் அறிக்கையில், போதிய விவரங்கள் இல்லாததால், நடவடிக்கை ஓராண்டாக தாமதமாகியுள்ளது.சென்னையில், விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த, சென்னை ஐகோர்ட், 2006ல் வழங்கிய தீர்ப்பை அமலாக்க, 12 உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைத்தது.

ஒத்துழைப்பு இல்லை
 
துவக்கம் முதலே, சி.எம்.டி.ஏ.,மாநகராட்சி அதிகாரிகள், இக்குழுவுடன் ஒத்துழைக்கவில்லை. விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, முதலில், தி.நகரில் உள்ள விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சிறப்பு கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்கள் குறித்து, கள ஆய்வு செய்து விரிவான நடவடிக்கை எடுக்க கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது.
இதன்படி, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, 64 கட்டடங்கள் குறித்த விவரங்கள் அறிக்கையாக அளிக்கப்பட்டது.

கோடம்பாக்கத்தில்...

இதேபோல, கோடம்பாக்கம் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கண்காணிப்பு குழு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், முதலில் ஆறு மாதங்கள் வரை அறிக்கை தயாரிக்கப்படுவதாகக் கூறி மாநகராட்சி அதிகாரிகள் தாமதப்படுத்தினர்.

விவரம் இல்லை

அதன் பின், ஒட்டுமொத்தமான ஓர் அறிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்புக் குழுவிடம் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில் போதுமான விவரங்கள் இல்லாததால், இதை கண்காணிப்புக் குழு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியது.

இதையடுத்து, தி.நகர் அறிக்கை மாதிரியில் இந்த அறிக்கையை அளிக்குமாறு கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது.இதன்பின் மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே கொடுத்த அறிக்கையை, பட்டியல் வடிவில் மாற்றி அமைத்து தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையும் போதிய விவரங்கள் இல்லை என, திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து, இதில் சில திருத்தங்கள் செய்து, மாநகராட்சி அதிகாரிகள்கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:

கோடம்பாக்கம் பகுதி முழுவதையும் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், கோடம்பாக்கம் முதல் வடபழனி, சாலிகிராமம் வரையிலான ஆற்காடு சாலையில் உள்ள, 21 அடுக்குமாடி கட்டடங்கள் குறித்த விவரங்களை மட்டுமே அறிக்கையாக தொகுத்து மாநகராட்சிஅதிகாரிகள் அளித்துள்ளனர்.அதிருப்திஅதிலும், இந்த கட்டடங்களில் அனுமதிக்கப்பட்ட தளபரப்பு குறியீடு, கட்டப்பட்டிருக்கும் கட்டடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தளபரப்பு குறியீடு, முன், பின், பக்கவாட்டு காலியிடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவு, கட்டடங்களில் உள்ள அளவு, இதில் விதிமீறல் என்ன என்பது போன்ற விவரங்கள் துல்லியமாக இல்லை.

கட்டடங்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையாகவே இது இருக்கிறது. இதை பார்க்கும் போது, மாநகராட்சி அதிகாரிகள் வேண்டும் என்றே குறிப்பிட்ட சில விவரங்களை மறைப்பது போல் தெரிகிறது.

இதன் மூலம் இந்த கட்டடங்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை ஓராண்டாக தாமதமாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -