Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பக்கிங்ஹாம் கால்வாயில் பாலம் கட்டும் பணி இழுபறி : நிலம் கையகப்படுத்துவதில் கால தாமதம்

Print PDF

தினமலர்                                   03.09.2012

பக்கிங்ஹாம் கால்வாயில் பாலம் கட்டும் பணி இழுபறி : நிலம் கையகப்படுத்துவதில் கால தாமதம்

சென்னை : மாநகராட்சிக்கு உட்பட்ட சடையங்குப்பம் - திருவொற்றி யூரை இணைக்க, பக்கிங்ஹாம் கால்வாயில், 16.5 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் பாலம் அமைக்கத் திட்டமிட்டு ஒன்றரை ஆண்டாகியும், நிலம் கையகப்படுத்துவதில் தாமதத்தால், பணி துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வட சென்னை எண்ணூர் பகுதியின் முப்புறங்கள், கொசஸ்தலை ஆறு, எண்ணூர் சிறுகுடா, பக்கிங்காம் கால்வாய் மற்றும் வங்கக் கடல் என, நீர்நிலைகளால் வரையறுக்கப்பட்டுள்ளன.
மரப்பாலம் பழுதுஇதனால், மாநகராட்சியுடன் அண்மையில் இணைக்கப்பட்ட எண்ணூர் பகுதியின், சடையங்குப்பம், பர்மா காலனி போன்ற இடங்கள் தீவு போல் காட்சியளிக்கின்றன. இந்த பகுதி வாசிகள் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து தான், எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டும். கால்வாயை கடக்க தற்போது, மரப்பாலம் ஒன்று உள்ளது. பருவமழை காலத்தில், புழல் மற்றும் பூண்டி ஏரிகள் நிரம்பும்போது திறந்து விடப்படும் தண்ணீர், சடையங்குப்பத்தை சூழ்ந்து விடும்.

அப்போது, பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, மரப்பாலம் தாக்குப்பிடிக்காமல் அடித்துச் செல்லப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் தற்காலிகமாக மாவட்ட நிர்வாகம், மரப்பாலத்தை சரி செய்து, போக்குவரத்தை சீர் செய்து வருகிறது.

இந்த நிலையை மாற்ற, சுனாமி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், சடையங்குப்பத்தை திருவொற்றியூருடன் இணைக்கும் வகையில், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே கான்கிரீட் பாலம் கட்ட, 2010ம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டது.

ஒப்பந்த நிறுவனம் ஓட்டம்

அந்த பணிக்கு 16.5 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், அரசியல் குறுக்கீடுகளால், முன் வைப்பு தொகையைக் கூட வாங்காமல் ஓட்டம் பிடித்தது. இதனால், பணி முடங்கியது.மீண்டும், கடந்த ஆண்டு, டிசம்பர் 14ம் தேதி, மறு ஒப்பந்தம் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டது. திருவாரூரைச் சேர்ந்த நிறுவனம் பணியை செய்ய முன்வந்தது.

இதைத் தொடர்ந்து, மேம்பாலம்கட்டுவதற்கான தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள மெத்தனத்தால், இந்த பணி மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திட்டத்திற்கு, 6,424 ச.மீ., வரை நிலம் தேவை என, முடிவு செ#யப்பட்டு, அதை கையகப்படுத்தும் பணி, கடந்த 2010ம் ஆண்டு, டிசம்பர் மாதமே துவங்கி விட்டது. தாசில்தார் முன்னிலையில், நிலம் அளவை பணியும் முடிந்தது.

தாமதம் ஏன்?

ஆனால், அதற்கு பிறகு, நிலத்தை கையகப்படுத்தும் பணி இதுவரை துவங்கவில்லை. இதனால், கடந்த ஆகஸ்ட் மாதம் முடிய வேண்டிய பாலப் பணி, இன்னும் துவங்காமல் உள்ளது.

இது குறித்து, அம்பத்தூர் ஆர்.டி.ஓ., சண்முகம் கூறுகையில், ""எந்தெந்த இடம் பாலம் கட்டுவதற்கு தேவைப்படுகிறது என, ஏற்கனவே கணக்கிடப்பட்டது. அந்த இடத்திற்கு உரியவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளோம். கடந்த மாதம் 12ம் தேதி விசாரணையில், நில உரிமையாளர்கள் ஏழு பேர் வரவில்லை. விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததும், நிலத்திற்குரியவர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டதும் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கிவிடும்,'' என்றார்.

இது தவிர, மின் வாரிய மெத்தனமும், பணிகள் தொய்வடைந்து உள்ளதற்கு காரணம் என, நெடுஞ்சாலைத் துறை தரப்பில் கூறப்படுகிறது.

மின் வாரியமும் காரணம்?

பாலம் கட்டும் இடத்தில் உயரழுத்த மின்கம்பங்கள் உள்ளன. இதில், ஒன்பது மின்கம்பங்கள், மூன்று மின்மாற்றிகள் மற்றும் 10 மின் இணைப்பு பெட்டிகளை அகற்றுவதற்கு, மாநில நெடுஞ்சாலைத் துறை கடந்த 2011ம் ஆண்டு, ஜூலை மாதம், 31 லட்சம் ரூபாயை மின்வாரியத்திற்கு செலுத்தியது. ஆனால் மின்வாரியம், எதையும் மாற்றவில்லை.

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சுனாமி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் 355 மீ., நீளத்திற்கு கான்கிரீட் பாலம் கட்டப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மின்கம்பங்கள் அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தூண்கள் எழுப்புவதற்குரிய பூர்வாங்கப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன,'' என்றார்.