Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 3,500 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF
தின மணி          18.02.2013

ரூ. 3,500 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

நாகை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 3,500 கோடி நிதி ஒதுக்கீடு அளித்துள்ளது என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் சன்னதி தெருவில் (நகராட்சியின் 26-வது வார்டு) சனிக்கிழமை நடைபெற்ற நியாய விலைக் கடைக்கான புதிய கட்டடத் திறப்பு விழாவில் அமைச்சர் பேசியது:

அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில், தமிழக அரசு பல்வேறு  நலத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துகிறது. மக்களின் தேவைகளை அறிந்து நியாய விலைக் கடைகள் மூலமாக அனைத்துப் பொருள்களும் வழங்கப்படுகின்றன. நாகை சட்டப்பேரவை உறுப்பினரின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 4 லட்சமும், நகராட்சி நிதியாக ரூ. 1 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ. 5 லட்சம் மதிப்பில் இந்த நியாய விலைக்கடைக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதன்மைப் பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில்,  நாகை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்மூலம் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் ஜெயபால். விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார்.

 மாவட்ட ஊராட்சித் தலைவர் ஏ.கே. சந்திரசேகரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் பாத்திமா சுல்தான், மாவட்ட வழங்கல் அலுவலர் சி. சித்திரைராஜூ, நகர்மன்றத் தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நகர்மன்ற துணைத்  தலைவர் ஏ. சுல்தான் அப்துல் காதர், நகராட்சி ஆணையர் அப்துல் லத்தீப் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Last Updated on Monday, 18 February 2013 09:22