Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மலிவு விலை உணவகங்கள்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

Print PDF
தின மணி                   19.02.2013

மாநகராட்சி மலிவு விலை உணவகங்கள்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

சென்னை மாநகராட்சியின் சார்பில் கீழ்ப்பாக்கத்தில்  திறக்கப்படவுள்ள மலிவு விலை உணவகம்.

சென்னை மாநகராட்சியில் மலிவு விலை உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (பிப். 19) திறந்து வைக்கிறார்.

சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் ஒரு மலிவு விலை உணவகம் என மொத்தம் 200 உணவகங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அண்மையில் அறிவித்தார். இதனடிப்படையில் முதல் கட்டமாக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு உணவகம் வீதம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த உணவகங்களைத் தொடங்கி வைக்கும் வகையில், சாந்தோம் நெடுஞ்சாலை பதிவுத்துறை அலுவலகம் அருகில் உள்ள மாநகராட்சி கட்டடத்தில் நடைபெறும் விழாவில் மலிவு விலை உணவகத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கிறார்.

இதனையடுத்து 15 உணவகங்களும் செவ்வாய்க்கிழமை மதியம் முதல் செயல்படும்.

என்ன கிடைக்கும்? இந்த உணவகங்களில் ஒரு இட்லி (100 கிராம்) ரூ. 1-க்கும், தயிர் சாதம் (350 கிராம்) ரூ. 3-க்கும், சாம்பார் சாதம் (350 கிராம்) ரூ. 5-க்கும் கிடைக்கும். காலை 7 மணி முதல் 10 மணி வரையில் காலை உணவும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையில் மதிய உணவும் கிடைக்கும். வாரத்தின் 7 நாள்களும் உணவகங்கள் செயல்படும். இந்த உணவகங்கள் அனைத்தும் அந்தந்தப் பகுதியில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்படும். இவர்களுக்கு மாநகராட்சி மூலம் ஊதியம் வழங்கப்படும். ஒரு உணவகத்தில் சுமார் 10 முதல் 12 பேர் பணியாற்றுவார்கள்.

கூடிய விரைவில் அனைத்து வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் கட்ட மலிவு விலை உணவகங்கள் செயல்படும் 15 இடங்கள்: திருவொற்றியூர் மாநகராட்சி வணிக வளாகம் (மண்டலம் 1, வார்டு 11), மணலி மாத்தூர் மாநகராட்சி கட்டடம் (மண்டலம் 2, வார்டு 19), மாதவரம் மேட்டூர் இணைப்பு சாலையில் உள்ள சமூக நலக் கூடம் (மண்டலம் 3, வார்டு 24), பழைய வண்ணாரப்பேட்டை பொம்மிசிவராமலு தெரு மாநகராட்சி கட்டடம் (மண்டலம் 4, வார்டு 48), நாட்டுப்பிள்ளையார் கோயில் தெரு மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 5, வார்டு 55).

புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள பழைய மண்டல அலுவலகம் (மண்டலம் 6, வார்டு 73), ஓரகடம் கட்டபொம்மன் தெரு மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 7, வார்டு 79), கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள பழைய மண்டல அலுவலகம் (மண்டலம் 8, வார்டு 103), சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 9, வார்டு 126), தியாகராய நகர் சிவஞானம் சாலையில் உள்ள மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 10, வார்டு 136).

மதுரவாயல் வடக்கு வாட வீதி அருகில் உள்ள மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 11, வார்டு 146), நங்கநல்லூர் நேரு நெடுஞ்சாலை மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 12, வார்டு 166), திருவான்மியூர் பி.ஜீ.ஈ. சாலையில் உள்ள மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 13, வார்டு 181), பெருங்குடி அண்ணா நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகம் (மண்டலம் 14, வார்டு 184),  துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தொழிற்பயிற்சிக் கூடம் (மண்டலம் 15, வார்டு 195).
Last Updated on Thursday, 21 February 2013 11:26