Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அலுவலகங்களில் குண்டு பல்புக்குத் தடை

Print PDF

தினமணி 10.09.2009

மாநகராட்சி அலுவலகங்களில் குண்டு பல்புக்குத் தடை

சென்னை, செப். 9: புவி வெப்பமயமாவதைத் தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) முதல் குண்டு பல்புகளை பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.

உலகம் வெப்பமயமாவதைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதன்கிழமை இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கை அணைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 99 பிரபலங்கள் பங்கேற்றனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி ஏற்பாடு செய்ததற்காக மேயர் மா. சுப்பிரமணியனை, பிரிட்டன் தூதர் ரிச்சர்ட்ஸ் ஸ்டாக் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்புக்குப் பின் மேயர் அளித்த பேட்டி: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 13-ல் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பிறக்கும் குழந்தையின் வீட்டு முன் மாநகராட்சி சார்பில் மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் சென்னை பசுமை பெறும்.

புவி வெப்பமயமாவதைத் தடுப்பது, மின் கட்டணத்தை சேமிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் வியாழக்கிழமை முதல் குண்டு பல்புகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. குண்டு பல்புகளுக்கு பதிலாக சி.எப்.எல். பல்புகள் பயன்படுத்தப்படும். இதை ஊக்குவிக்கும் வகையில் மாநகராட்சி அலுவலங்களில் மின் கட்டணம் செலுத்தப்படுவதை ஆய்வு செய்து, குறைந்த அளவு மின் கட்டணம் செலுத்தும் அலுவலகங்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும் என்றார்.