Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மலிவு விலை உணவகத்தின் பெயர் "அம்மா' உணவகம்

Print PDF
தின மணி          23.02.2013

மாநகராட்சி மலிவு விலை உணவகத்தின் பெயர் "அம்மா' உணவகம்

சென்னை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ள மலிவு உணவகத்துக்கு "அம்மா' உணவகம் என்ற பெயரை வைப்பது தொடர்பான தீர்மானம் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மலிவு உணவகத்தின் பெயர் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் விவரம்: சென்னை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் மலிவு விலை சிற்றுண்டி உணவகங்கள் திறக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மலிவு விலை சிற்றுண்டி உணவகங்களை பிப்ரவரி 19-ம் தேதி முதல்வர் திறந்து வைத்தார்.

இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் மலிவு விலை உணவகம் என்ற பெயரை "அம்மா' உணவகம் என்று மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, உணவகத்தின் பெயரை "அம்மா' உணவகம் என்று அரசின் அனுமதி பெற்று மாற்றுவதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு அனைத்து அதிமுக உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

முதல்வர் பிறந்த நாளில் 24 உணவகங்கள் திறப்பு: பின்னர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மேயர், முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று மேலும் 24 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும். மார்ச் மாத இறுதிக்குள் 200 வார்டுகளிலும் உணவகங்கள் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஒரு நாளைக்கு ரூ. 300 ஊதியம் வழங்கப்படுகிறது, என்றார்.

இப்போது 15 மண்டலங்களில் மொத்தம் 15 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Monday, 25 February 2013 11:18