Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை - பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சோதனை ஓட்டம்

Print PDF
தின மணி            25.02.2013

சென்னை - பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சோதனை ஓட்டம்

சென்னை சென்ட்ரல் - பெங்களூர் இடையே இயக்கப்படவுள்ள டபுள் டெக்கர் ரயிலின் சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னை-பெங்களூர் இடையே இரண்டடுக்கு (டபுள் டெக்கர்) ரயில் இயக்கப்படும் என கடந்த 2012-13-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கான பிரத்யேக பெட்டிகள்

பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஆர்.சி.எஃப்.) தயாரிக்கப்பட்டு கடந்த 2 நாள்களுக்கு முன் சென்னை வந்தடைந்தது.

இதைடுத்து இந்த ரயில் சோதனை ஒட்டமாக 11 பெட்டிகளுடன் சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் புறப்பட்டது. அந்த ரயில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு திங்கள்கிழமை காலை வரும் என்று தெரிகிறது.

சென்னையில் மேலும் சில சோதனைகள் நடத்தப்பட்ட பின்பே சென்னை -பெங்களூர் இடையேயான டபுள்டெக்கர் ரயில் தேதி குறிக்கப்பட்டு முழு அளவிலான சேவையைத் தொடங்கும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் முதல் டபுள் டெக்கர் ரயில்சேவை கொல்கத்தா மாநிலம் ஹெüரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில்நிலையங்களுக்கு இடையே கடந்த 2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

அதேபோல கடந்த மாதம் தில்லி - ஜெய்ப்பூர் இடையே டபுள் டெக்கர் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

சென்னை - பெங்களூர் இடையே இயக்கப்படவுள்ள டபுள் டெக்கர் ரயில் சேவை தென்னிந்தியாவில் முதல் முறை என்ற பெருமையை பெறும்.

சிறப்பு அம்சங்கள்: இந்த டபுள் டெக்கர் ரயிலில் முழுக்க இருக்கை வசதி மட்டுமே இருக்கும். மேலும் இந்த ரயிலில் உள்ள பெட்டிகள் அனைத்திலும் குளுகுளு வசதி செய்யப்பட்டிருக்கும்.

சென்னை-பெங்களூர் டபுள் டெக்கர் ரயில், 13 பெட்டிகளின் தொகுப்பாக இருக்கும். 11 பெட்டிகள் பயணிகளுக்காகவும், 2 பெட்டிகள் சரக்கு மற்றும் பிரேக் வேனாகவும் இருக்கும்.

அதிகமான பயணிகள்: வழக்கமான ரயில் பெட்டிகளைவிட இந்த ரயிலில் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும். இப்போது சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டியில் 78 பேர் பயணிக்க முடியும். ஆனால், டபுள் டெக்கர் ரயிலில் ஒரு பெட்டியில் 120 பேர் வரை பயணம் செய்ய முடியும். சென்னை- பெங்களூர் இடையே 6 மணி நேர பயணம்.

உத்தேச கட்டணம்: சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒருவருக்கு ரூ.510-ம் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேர் கார் பெட்டியில் ரூ.386-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டபுள் டெக்கர் ரயிலில் ஒருவருக்கு ரூ.370 கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. எனினும் நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் கட்டணத்தில் மாறுதல் இருக்கலாம்.

பாதுகாப்பு அம்சம்: இந்த ரயில் பெட்டிகளில் சிவப்பு, மஞ்சள் நிற வண்ணம் பூசப்பட்டிருக்கும். நவீன முறையில் தயாரிக்கப்படுவதால், விபத்து ஏற்படும் போது, ஒரு பெட்டியின் மீது மற்றொரு பெட்டி மோதாது என ரயில் பெட்டி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்காருப்பேட்டை, கே.ஆர்.புரம், பெங்களூர் கன்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கல்வீச்சு: ஞாயிற்றுக்கிழமை இந்த ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்ற போது வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே மர்ம நபர்கள் சிலர், ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.

எனினும் உள்ளே பயணம் செய்த அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Last Updated on Tuesday, 26 February 2013 07:01